போட்ட சில மாதங்களிலே பாழாகும் புதிய சாலைகள் - மதுரை மாநகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுப்பாரா?


மதுரை: போட்டு சில மாதங்களே ஆன புதிய தார் சாலைகளை ஒப்பந்த நிறுவன தொழிலாளர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கவனத்திற்கே தெரியாமல் கவனக்குறைவால் விடுப்பட்ட பெரியாறு குடிநீர் குழாய் மறுசீரமைப்பு பணிகளை பார்க்கிறார்கள். புதிய சாலைகள் இப்படி இஷ்டம் போல் குழி தோண்டி பாழாக்கப்படுவதால் மாநகராட்சி நிதி விரயமாவதுடன் புதிய சாலைகள் போட்டு எந்த பயனும் இல்லாமல் போவதாக மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.

மதுரை மாநகராட்சியில் இதுவரை ரூ.350 கோடிக்கு புதிய சாலைகள் போடப்பட்டுள்ளன. புறநகர் 28 வார்டுகளில் ஒரே நேரத்தில் பாதாளச் சாக்கடை, பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள், புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் நடக்கிறது. பாதாளச் சாக்கடை, குடிநீர் பணிகளும் முடிய, முடிய புதிய சாலைகள் போடப்படுகிறது. மாநகராட்சி மேயர் இந்திராணி, ஆணையர் தினேஷ்குமார், மத்திய, மாநில அரசுகளிடம் பெரும் சிரமப்பட்டு நிதியை பெற்று, இந்த புதிய சாலைகளையும், பாதாளச் சாக்கடை மற்றும் குடிநீர் திட்டப் பணிகளையும் செயல்படுத்தி வருகிறார்கள்.

ஆனால், இப்பணிகளை அரசியல் பின்னணியில் டெண்டர் எடுத்த ஒப்பந்த நிறுவனங்கள், அதிகாரிகள் சொல்வதை கொஞ்சமும் மதிப்பதில்லை, பின்பற்றுவதில்லை. குடிநீர், பாதாள சாக்கடைப் பணிகளை முடித்த பிறகே ஒவ்வொரு குடியிருப்பிலும், முக்கிய பிரதான சாலைகளிலும் புதிய சாலைகளை அமைக்க வேண்டும் என்று ஆணையர் கண்டிப்புடன் கூறியுள்ளார். ஆனால், புதிய சாலைகளை போடுவதற்கு டெண்டர் எடுத்த ஒப்பந்த நிறுவனங்கள், பணிகள் முடிகிறதோ, இல்லையோ, கடமைக்கு புதிய சாலைகளை ஒவ்வொரு வார்டிலும் ஒரே கட்டமாக போட்டு முடித்துவிட வேண்டும் என்று குறியாக உள்ளனர்.

அதனால், பாதளச் சாக்கடை, பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டப் பணிகளில் சில நுட்பமான பணிகளை கவனக்குறைவால் தவறவிட்டு புதிய சாலைகளை போட்டுச் செல்கின்றனர். அதன்பிறகு, தற்போது விடுப்பட்ட பணிகளை மறுசீரமைப்பு செய்வதாக கூறி, சில மாதங்களுக்கு முன் போட்ட புதிய சாலைகளை குழி தோண்டி பழாக்கி மறுசீரமைப்பு பணிகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால், புதிய சாலைகளை போட்டதன் நோக்கமே பாழாகி புதிய சாலைகள் சேதமடைந்து வருகிறது.

இந்த சாலைகளை பணிகள் முடிந்த பிறகு மீண்டும் தார் சாலையாக போட்டு புதுப்பித்து சென்றிருக்க வேண்டும். ஆனால், மிக அலட்சியமாக சிமென்ட் போட்டு பூசியும், மண்ணைப் போட்டு மேவியும் செல்கின்றனர். இதனால், விரைவில் வரவுள்ள பருவ மழைக்கு இந்த சாலைகள் முற்றிலும் சேதமடைய வாய்ப்புள்ளது. இதுபோல், புறநகர் வார்டு பகுதியில் போட்ட புதிய சாலைகளை இப்படி தோண்டி ஒப்பந்த நிறுவன தொழிலாளர்கள் பழாக்கி வருவதை, மாநகராட்சி அதிகாரிகளாலேயே தட்டிக் கேட்க முடியவில்லை.

ஏனெனில் அவர்கள் அரசியல் பின்னணியில் டெண்டர் எடுத்து வருவதால், அவர்கள் ஆளும் கட்சியினரிடம் சிண்டு முடிந்து விடுவார்கள் என அதிகாரிகள் அஞ்சுகின்றனர். ஆகவே, மாநகராட்சி ஆணையர், அதி்காரிகள் கவனமில்லாமல் இப்படி புதிய சாலைகள பழாக்கும் ஒப்பந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

x