சிதம்பரம் நகராட்சியில் ரூ.400 கோடிக்கு திட்டப் பணிகள் - அமைச்சர் பெருமிதம்


கடலூர்: சிதம்பரம் நகராட்சி பகுதியில் பல்வேறு அரசு திட்டப்பணிகளை இன்று ஆய்வு செய்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிதம்பரம் நகராட்சி பகுதியில் ரூ 400 கோடிக்கு திட்டப்பணிகள் நடைபெற்று வருவதாக பெருமிதத்துடன் கூறினார்.

சிதம்பரம் நகரில் பல கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் வெளி வட்ட சாலை, கூட்டு குடிநீர் திட்டப் பணிகள் குறித்து இன்று (செப்.24) வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், சிதம்பரம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் குமாரராஜா, சிதம்பரம் நகர் மன்ற தலைவர் செந்தில்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் அப்பு சந்திரசேகரன், ஏ.ஆர்.சி.மணி, தாரணி மற்றும் நகராட்சி, நீர்வளத்துறை, குடிநீர் வடிகால் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

ஆய்வுக்குப் பின் பேசிய அமைச்சர் கூறியதாவது: "சிதம்பரத்தில் நான்கு வீதிகளிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால், மாற்று ஏற்பாடாக தில்லையம்மன் ஓடை வழியாக பேருந்து நிலையம் வரை செல்லும் உள்வட்டசாலை அமைக்கும் பணி ரூ.35 கோடியில் நடைபெற்று வருகிறது. சிதம்பரம் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அவசரமாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும் என்றால் சிதம்பரம் நகரத்துக்குள் பயணித்து கிட்டத்தட்ட அரை மணி நேர தாமதத்துக்குப் பிறகுதான் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இப்போது அமையும் சாலையானது அந்த சிக்கலை நீக்கி போக்குவரத்துக்கு பயனுள்ளதாக இருக்கும். இந்த சாலை வழியாக சென்றால் எளிதில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் செல்ல முடியும். இதில். போக்குவரத்து அதிகரிக்கும் போது இந்த பகுதி மக்களின் பொருளாதார நிலை மேம்படும். ஆக, இப்பகுதிக்கு முதல்வர் ஸ்டாலின் வெளிச்சத்தை கொடுத்துள்ளார்.

சிதம்பரம் பகுதியில் கிட்டத்தட்ட ரூ.400 கோடி அளவில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் எல்லாம் முடிவுக்கு வரும் போது போக்குவரத்துக்கு உகந்த நகரமாக சிதம்பரம் திகழும். அதேபோல் புதிய பேருந்து நிலையம் மற்றும் நகர பகுதி விரிவடைந்து காட்சி அளிக்கும்" என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறினார்.

x