”இந்தியா கூட்டணியின் பிஆர்ஓ-வாக பிரதமர் மோடி செயல்படுகிறார் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எந்தநேரத்தில் சொன்னாரோ தெரியவில்லை, தற்போது அவரது மகன் உதயநிதியை தேசிய அளவில் தெரியவைக்கும் பிரமோஷன் வேலையை பிஆர்ஓ-வாக இருந்து பாஜக பார்த்திருக்கிறது. ஒரேநாளில் ஒபாமா என்பதுபோல ஒரே பேச்சால் இந்தியா முழுவதும் அறிந்த முகமாக மாறியிருக்கிறார் உதயநிதி.
கடந்த ஒருவாரத்தில் உதயநிதி பெயரைத்தாங்கிய செய்திகளே வடமாநிலங்களில் தலைப்புச் செய்திகளாக இடம்பெற்றுள்ளன. இணையத்தில் அதிகம் தேடப்பட்டதும் அவரது பெயராகவே இருக்கிறது. பெரும்பாலான தொலைக்காட்சி விவாதங்களில் உதயநிதி குறித்த விவாதங்கள் அனல் பறக்கின்றன. சனாதனம் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று என்ற அமைச்சர் உதயநிதியின் பேச்சுத்தான் இத்தனைக்கும் காரணம்.
உதயநிதியின் சனாதனம் குறித்த பேச்சை எதிர்க்கும் பாஜக, அதை அரசியல் விவகாரமாக ஆக்கியதுடன், தமிழகம் தாண்டி இந்தியா முழுமைக்கும் கொண்டுபோயிருக்கிறது. சனாதனம் என்பதைவிட இந்துமதம் குறித்த பேச்சாக அது திருப்பிவிடப் பட்டிருப்பதால் நாடு முழுவதும் உள்ள இந்து அமைப்புகளிடமிருந்து பெரும் எதிர்ப்பு உதயநிதிக்கு கிளப்பியிருக்கிறது. அதுவே அவரை நாடறிந்த பிரபலமாகவும் மாற்றியிருக்கிறது.
உதயநிதியின் இந்த பேச்சு அடங்கிய வீடியோவை செப்டம்பர் 2-ம் தேதி வெளியிட்ட பாஜக-வின் தேசிய ஐ.டி. விங் பொறுப்பாளர் அமித் மால்வியா, இந்தியாவில் சனாதன தர்மத்தை பின்பற்றும் 80 சதவீத மக்களை ஒழிப்பதற்கு உதயநிதி அழைப்பு விடுத்ததாக குறிப்பிட்டு நெருப்பை பற்றவைத்தார். அவரைத்தொடர்ந்து ராஜஸ்தானின் துங்கர்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ”இந்தியா கூட்டணியின் இரண்டு மிகப்பெரிய கட்சிகளான திமுக, காங்கிரஸ் கட்சிகளின் மூத்த தலைவர்களின் மகன்கள் சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசுகிறார்கள்” என்று இந்த விவகாரத்தில் சம்பந்தமில்லாத காங்கிரஸையும் இதில் கோத்துவிட்டார்.
இந்தியா கூட்டணிக்கு எதிராக அரசியல் செய்வதற்கு என்ன பிடி கிடைக்கும் என்று பார்த்து காத்திருந்த பாஜகவுக்கு உதயநிதியின் இந்தப் பேச்சு அல்வா போல கிடைத்தது. அதையடுத்து இந்தியா கூட்டணி இந்து மக்களுக்கு எதிரானது என்ற கருத்துகளை மக்கள் மனதில் பதியவைக்கும் வாய்ப்பாக இதை பாஜக பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறது. இதனால் பாஜக தயவில் மிக எளிதாக அனைத்து மொழி மக்களிடமும் உதயநிதி போய்ச் சேர்ந்திருக்கிறார்.
டெல்லியில் வினீத் ஜிண்டால் என்பவர் உதயநிதி மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யும்படி போலீஸில் புகார் அளித்தார். அதை ஏற்று டெல்லி போலீஸாரும் உதயநிதி மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியைச் சேர்ந்த சாமியாரான பரமஹன்ஸ ஆச்சார்யா என்பவர், “உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை இழிவுபடுத்திவிட்டதால், அவருடைய தலையைக் கொண்டுவருவோருக்கு 10 கோடி ரூபாய் அளிக்கப்படும்” என பகீர் கிளப்பினார். உதயநிதியின் படத்தை கத்தியால் குத்தி அவர் கிழிக்கும் வீடியோ காட்சிகளும் வெளியாயின. இந்த வீடியோக்கள் அனைத்து மாநிலங்களுக்கும் வைரலாக பரவி உதயநிதிக்கு இன்னும் பாப்புலாரிட்டி கொடுத்தது.
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி முன்பாக வழக்கறிஞர் சுதீர் குமார் ஓஜா என்பவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது புகார் கூறினார். முசாபர்பூர் காவல் நிலையத்திலும் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குறிப்பாக, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 500, 504, 295, 295ஏ, 298, 120பி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்னொரு பெரிய மாநிலமான மகாராஷ்டிர மாநிலத்திலத்திலும் உதயநிதிக்கு இலவச விளம்பரம் கிடைத்தது. “மகாராஷ்டிராவில் உதயநிதி ஸ்டாலின் கால்வைக்க முடியாது” என மகாராஷ்டிர மாநில மூத்த தலைவரும் அம்மாநில திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சருமான மங்கள் பிரபாத் லோதா எச்சரித்திருக்கிறார். அந்த எச்சரிக்கை அங்குள்ள மக்களை உதயநிதியை, யார் அவர் என புருவம் உயர்த்தி பார்க்கவைத்திருக்கிறது.
சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் நீதிபதிகள் உள்ளிட்ட 262 பிரபலங்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர். கடந்த 6-ம் தேதியன்று டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடியும், “சனாதனம் குறித்த தாக்குதல்களை அமைதியாக எதிர்கொள்ளக்கூடாது, சனாதனத்துக்கு எதிரான கருத்துகளுக்கு உண்மையைக் கொண்டு பதிலடி தரவேண்டும்” என்று பேசினார். ஜார்கண்ட் மாநிலத்தில் உதயநிதி உருவத்துக்கு செருப்புமாலை அணிவித்திருக்கிறார்கள்.
உதயநிதியின் இந்த கருத்து இந்தியா கூட்டணியிலும் கருத்து வேறுபாட்டை உருவாக்கியிருக்கிறது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “ஒரு பிரிவினரின் மனதை புண்படுத்தும் எந்த ஒரு செயலிலும் நாம் ஈடுபடக் கூடாது. வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட இந்தியாவில், ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி உணர்வுகள் உண்டு” என்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்திலும் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என்று தமிழக பாஜக ஆளுநர் ரவியிடம் பாஜக கோரிக்கை வைத்துள்ளது. உதயநிதி பதவி விலகக் கோரி 11-ம் தேதி முற்றுகைப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை. உதயநிதி ஸ்டாலினை கைது செய்ய வேண்டும் என்று ஆளுநருக்கு சுப்பிரமணியன் சுவாமியும் கோரிக்கை விடுத்துள்ளார். அதேசமயம், ’’சனாதனக் கோட்பாடுகளை ஒழிக்க வேண்டும் என்று தான் அமைச்சர் உதயநிதி பேசினாரே தவிர எந்த மதத்தையும், மத நம்பிக்கையையும் புண்படுத்தும் வகையில் பேசவில்லை. அமைச்சர் உதயநிதி பேசிய முழு விவரம் அறியாமல் பிரதமர் பேசுவதா?’’ என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இப்படி பல்வேறு மாநிலங்களிலும் கிளம்பும் எதிர்ப்பு காரணமாக உதயநிதிக்கு புரமோஷன் வேலைகள் அதுவாகவே நடக்கின்றன. மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி உள்ளிட்டவர்கள் உதயநிதியை விமர்சித்து பேச ஆரம்பித்திருப்பதாலும், பாஜக இந்த விவகாரத்தை விடாப்பிடியாக பிடித்திருப்பதாலும் உதயநிதிக்கு மேன்மேலும் விளம்பரம் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது.
உதயநிதிக்கு இந்திய அளவில் இலவச விளம்பரம் தேடித்தரும் வேலையை பாஜக செய்கிறதா? என்ற கேள்வியுடன் பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பேசினோம். “சனாதனம் என்பது தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுவது. அதுபற்றி எதுவும் தெரியாமல் உதயநிதி பேசியிருக்கிறார். அதனால் இந்தியா முழுவதும் தன்னெழுச்சியாக எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. அதை தாக்குப்பிடிக்க முடியாமல் திமுக தவித்து வருகிறது. அவர்களின் குடும்பத்துக்குள் மட்டுமல்லாமல் திமுகவுக்குள்ளும், அவர்களின் கூட்டணிக்குள்ளும் இதனால் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
எதிர்மறையான விளம்பரங்களுக்காக திமுகவினர் ஆரம்பம் முதலே இப்படி பேசிவருகிறார்கள். அது அவர்களுக்கு வழக்கம். தான். கிறிஸ்தவ பள்ளியில் படித்து, கிறிஸ்தவரை மணந்திருப்பதாக பேசியுள்ள உதயநிதி, இப்படி இந்துமதத்திற்கு விரோதமாக பேசியிருப்பதன் மூலம் அவர்கள் எப்பேற்பட்டவர்கள் என்பதை இந்தியா அடையாளம் கண்டுகொண்டிருக்கிறது.
எல்லா வகையிலும் தோல்வியுற்றிருக்கிற திமுக, மக்களை திசைதிருப்புவதற்காக இப்படிப் பேசுகிறது. ஆனால், இதுவரை தமிழ்நாடு அளவில் இருந்த எதிர்ப்பு தற்போது இந்திய அளவிலாக மாறியிருக்கிறது. இதன் விளைவுகளை அவர்கள் சந்தித்துத்தான் ஆகவேண்டும். இந்தியாவின் பெரும்பான்மை மக்களுக்கு அவர்கள் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்” என்றார் எஸ்.ஆர்.சேகர்.
யார் என்ன சொன்னாலும் சரி, தமிழக அளவில் தெரிந்த நபராக இருந்த உதயநிதி இப்போது அகில இந்திய பிரபலமாக மாறியிருக்கிறார். அதுவும் பாஜக மற்றும் இந்து அமைப்புகளின் தயவில் என்பதுதான் நிதர்சனமான உண்மை!