நான் பேசும்போது யாராவது எழுந்து சென்றால் ரத்தம் கக்கி சாவீர்கள்... செல்லூர் ராஜு லகலக!


செல்லூர் ராஜு

”நான் பேசும்போது யாராவது எழுந்து சென்றால் ரத்தம் கக்கி சாவார்கள்” என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேசியது அதிமுகவினரை கலகலக்க வைத்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் மதுரை தொகுதியில் டாக்டர் சரவணன் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார், முன்னாள் மேயர் ராஜன் செல்லப்பா உள்ளிட்ட பலரும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

சட்டமன்றத் தொகுதி வாரியாக செயல் வீரர்கள் கூட்டங்கள் நடத்தப்பட்டு அதிமுகவினர் உற்சாகப்படுத்தப்படுகின்றனர். அந்தவகையில் மதுரை வடக்கு தொகுதிக்கு உட்பட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் செல்லூர் ராஜு பேச ஆரம்பித்ததும் அதிமுகவினர் கலைந்து செல்ல ஆரம்பித்தனர்.

இதனால் கட்சி நிர்வாகிகள் சிலர், தொண்டர்களை அமருமாறு கூறினர். ஆனாலும் அதிமுகவினர் கூட்டத்திலிருந்து எழுந்து சென்றவாறே இருந்தனர். இதனால் வெறுத்துப்போன செல்லூர் ராஜு, "நான் பேசும்போது யாராவது எழுந்து சென்றார்கள் என்றால் அவர்கள் ரத்தம் கக்கிச் சாவார்கள்" என்று சிரித்தபடியே கூறியதுடன், "அதனால் நான் பேசி முடிக்கும் வரை யாரும் வெளியே செல்லக் கூடாது" என்று மைக்கில் சத்தமாகக் கூறினார்.

செல்லூராரின் இந்தப் தகீர் பேச்சால் அரங்கமே சற்று நேரம் கலகலப்பானது. ’தெர்மோகோல்’ உள்ளிட்ட தனது செயல்பாடுகளால் மட்டுமல்ல... இப்படி எதையாவது வெகுளித்தனமாக பேசியும் அருகில் இருப்பவர்களையும் அரங்கத்தில் இருப்பவர்களையும் கலகலப்பாக்கி விடுவது செல்லூர் ராஜுவின் வழக்கம்.

இதையும் வாசிக்கலாமே...

x