மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தற்போது மக்களவையில் அசுர பலத்துடன் இருக்கும் பாஜக, தனது நீண்ட கால அஜெண்டாக்கள் சிலவற்றை நிறைவேற்றிவிட பிரயாசைப்படுகிறது. இதிலிருக்கும் சூட்சுமத்தைப் புரிந்துகொண்டு எதிர்க்கட்சிகளும் தங்களுக்குள் இருக்கும் மனமாச்சரியங்களை எல்லாம் ஓரங்கட்டி வைத்துவிட்டு பாஜகவுக்கு எதிராக ஓரணியில் திரள்கின்றன.
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என தொடங்கிய பாஜக அரசு, இப்போது ஒரே நாடு ஒரே தேர்தல் என முக்கிய கட்டத்தில் வந்து நிற்கிறது. அயோத்தியில் ராமருக்கு கோயில், முத்தலாக் ஒழிப்பு, காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கம் என அடுத்தடுத்து அதிரடிகளை அமல்படுத்திய பாஜக அரசு பொது சிவில் சட்டத்தையும் நிறைவேற்றிட திட்டமிடுகிறது. அதற்கு நடுவில் ஒரே நாடு ஒரே தேர்தல் பிரச்சினையைக் கையில் எடுத்திருக்கிறார்கள்.
பாஜகவின் இத்தகைய தன்னிச்சையான போக்கு ஜனநாயகத்தின் அடிப்படை மாண்புகளையும், இந்திய அரசியலமைப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய கூறுகளையும் காவு வாங்கிவிடும் என எதிர்கட்சிகள் கலகக் குரல் எழுப்பி வருகின்றன. ஆனால், இதையெல்லாம் ஆளும் பாஜக காதில் வாங்கிக் கொண்டதாகத் தெரியவில்லை.
பாஜகவின் அண்மைக்கால இத்தகையை நடவடிக்கைகள் ஒரு கட்டத்தில் ஒரே நாடு ஒரே கட்சி என்ற நிலையில் கொண்டுவந்து நிறுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி தலைவர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள். இது குறித்தெல்லாம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசனிடம் பேசினோம்.
பாஜகவுக்கு எதிராக கொதிநிலை குறையாமல் பேசத் துவங்கிய அவர், ’’மத்தியில் இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் ஆட்சி என்பது ஜனநாயகத்தில் நம்பிக்கையற்ற பாசிச கொள்கைகளை பின்பற்றி எந்த முடிவையும் எதேச்சதிகாரமாக எடுக்க கூடிய ஆட்சி. பாஜகவின் 10 ஆண்டு கால ஆட்சி முடிய இன்னும் சில மாதங்களே உள்ளன. இதுவரை தாங்கள் கொடுத்த மக்கள் நலன் சார்ந்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாத பாஜக, மீண்டும் மக்களிடம் போய் வாக்குக் கேட்கத் தயாராகிறது. ஆனால், மக்கள் இனியும் பாஜகவை நம்பி ஏமாறத் தயாராக இல்லை. அதனால் தான் குறுக்கு வழியில் ஆட்சியை தக்கவைக்க என்னெவெல்லாமோ செய்கிறார்கள். ஆட்சிக்கு எதிரான மக்களின் கோபத்தை திசை திருப்பும் நோக்கில் மதத்தை முன்னிறுத்துகிறது பாஜக.
சனாதன எதிர்ப்பு, சனாதன ஒழிப்பு என்ற கருத்து இன்று நேற்று ஏற்பட்டதல்ல. நீண்ட காலமாக பேசப்படும் கருத்து அது. இது குறித்து அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், சமத்துவ சமுதாயம் அமையப் பாடுபட்ட கம்யூனிச தலைவர்கள் என எல்லோரும் பேசியுள்ளனர். இன்றைக்கு அதனை ஒரு பிரச்சினையாக்கி, அமைச்சரவை கூட்டத்திலேயே மோடி பேசியிருக்கிறார். சனாதன எதிர்ப்பு கருத்துகள் குறித்து விவாதத்திற்கு வராமல், அவற்றிற்கு எதிராக கலகம் செய்யுங்கள் என கூறி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இந்து மதத்திற்கு எதிரான கருத்தை கூறியதை போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறார் மோடி.
அடுத்ததாக, இப்போது இந்தியா என்ற பெயரைச் சொல்வதற்கு கூட தயங்குகிறது பாஜக. இந்தியா என கூறினால் எங்கே எதிர்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியின் பெயர் பிரபலமாகி விடுமோ என அஞ்சுகிறது. இதனால்தான் நாட்டின் பெயரை பாரதம் என மாற்ற முயல்கின்றனர். அவ்வாறு ஒரு நாட்டின் பெயரை மாற்ற வேண்டிய சூழல் உருவானால் நாட்டில் உள்ள எதிர்கட்சிகள், வல்லுநர்களை கலந்து பேசியிருக்க வேண்டும். அப்படி இல்லாமல் ஏதேச்சதிகாரமாக ஒரே நாள் இரவில் இந்திய குடியரசு தலைவர் என்பதை பாரத குடியரசு தலைவர் என மாற்றி அழைப்பிதழ் அச்சடித்துள்ளனர்.
இது பாஜக மீது மக்கள் கொண்டுள்ள கோபத்தை திசை திருப்பும் முயற்சி. மீண்டும் குறுக்கு வழியில் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சி மாத்திரமல்ல... ஆர்எஸ்எஸ் அஜெண்டாக்களை அமல்படுத்தும் திட்டமும்கூட. ஆர்எஸ்எஸ் அஜெண்டா என்பது அபாயகரமானது. அகண்ட பாரதம் என்பதுதான் அதன் இறுதி லட்சியம். ஒட்டுமொத்த உலகத்தையே தனது குடையின் கீழ் கொண்டுவர நினைத்த ஹிட்லர் எப்படி இரண்டாம் உலகப் போரை துவக்கி லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தாரோ அத்தகைய கொள்கை உடையதுதான் ஆர்எஸ்எஸ்-ஸின் அஜெண்டா.
பெயர் மாற்றம் என்பது வெறும் பெயர் மாற்றம் மட்டுமல்ல. ஆர்எஸ்எஸ் அஜெண்டாவை நிறைவேற்ற வைக்கப்படும் கோலத்தின் முதல் புள்ளி இது. விஸ்வகர்மா யோஜனா என்ற திட்டமும் இதன் நோக்கமே. குலக்கல்வி முறையை மீண்டும் கொண்டுவரும் திட்டமாகும் இது. இவற்றின் மூலம் மக்களை பிளவு படுத்தி அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை கையகபடுத்த முயலும் அபாயகரமான ஆர்எஸ்எஸ் அஜெண்டா குறித்து மக்களிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் அரசியல் ரீதியாக எடுத்துச் செல்வோம்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லாதது என்பது மோடிக்கும் அமித் ஷாவுக்கும் தெரியும். ஆனால், மக்களை திசை திருப்புவதற்காக இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த ஆண்டு இறுதிக்குள் 5 மாநில தேர்தல் நடத்த வேண்டும். அடுத்த மே மாதம் மக்களவைத் தேர்தல் நடத்த வேண்டும். இந்நிலையில் 5 மாநில தேர்தல்களை நடத்தாமல் மக்களவைத் தேர்தலுடன் நடத்துவார்களா... அல்லது மக்களவைத் தேர்தலை முன்னதாகவே நடத்துவார்களா என்பதற்கு பதில் சொல்ல வேண்டும்.
தமிழகத்தில் தேர்தல் முடிந்து 2 ஆண்டுகள் தான் ஆகிறது. கர்நாடகத்தில் தேர்தல் முடிந்து சில மாதங்களே ஆகின்றன. இவற்றையெல்லாம் கலைக்கப் போகிறார்களா... ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பஞ்சாயத்து தொடங்கி பாராளுமன்றம் வரை நடத்துவது. இது சாத்தியமாகுமா?
பஞ்சாயத்து தேர்தலில் தெருவிளக்கு, குடிநீர் போன்ற கோரிக்கை முன் வைக்கப்படும் சட்டமன்ற தேர்தலில் மாநில உரிமை, நலன்கள் முன் வைக்கப்படும். பாராளுமன்ற தேர்தலில் நாடு தழுவிய பிரச்சினைகள், நாட்டைத் தாண்டிய எல்லைப் பிரச்சினைகள், பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்துப் பேசப்படும். இப்படி ஒவ்வொரு தேர்தலுக்கும் அணுகுமுறையும் பிரச்சாரமும் வெவ்வேறாக இருக்கும் நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது எப்படி சாத்தியமாகும்?
ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் அமலானால் செலவினங்கள் குறையும் என்கிறார்கள். வளர்ச்சிப் பணியில் ஈடுபட வேண்டிய அதிகாரிகள் அடிக்கடி வரும் தேர்தல் பணிகளால் அதில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்றும் காரணம் சொல்கிறார்கள். இதை ஏற்றுக்கொண்டு உள்ளாட்சி தொடங்கி பாராளுமன்றம் வரை அனைத்தையும் கலைத்துவிட்டு ஒரே தேர்தலாக நடத்துவதாக வைத்துக்கொள்வோம். தேர்தல் முடிந்து 2 மாதத்தில் சட்டமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் மூலம் ஒரு அரசு கவிழ்ந்து விடுகிறது. எம்எல்ஏ-க்கள் கட்சி மாறியதால் கவிழ்ந்து விடுகிறது. அல்லது பாஜகவின் கொள்கை அடிப்படையில் பிற கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏ-க்களை விலைக்கு வாங்குவதன் மூலம் ஒரு அரசு கவிழ்ந்து விடுகிறது என்றால் அங்கு என்ன செய்வீர்கள்? அடுத்த அரசு அமைவதற்கு 5 ஆண்டுகள் காத்திருப்பீர்களா... 6 மாதத்தில் ஒரு அரசு கவிழ்ந்தால் எஞ்சிய நாலரை ஆண்டுகளுக்கும் கவர்னர் ஆட்சி அமுல்படுதப்படுமா?
ஒரு பிரச்சினை தொடர்பாக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு ஆட்சி கலைவதாக வைத்துக்கொண்டால், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு அடுத்த சட்டமன்ற தேர்தல்கள் வரும் வரை நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடத்தாமல் காத்திருக்க முடியுமா... இதெல்லாம் சாத்தியாம்தானா?
ஆகவே, இது நடைமுறை சாத்தியம் இல்லை என்பது மோடிக்கும், அமித் ஷாவுக்கு மாத்திரமல்ல... தேர்தல் ஆணையத்திற்கும் தெரியும். தற்போது சிஏஜி அறிக்கையின் மூலம் வெளிவந்துள்ள ஊழல் பற்றி நாடு முழுவதும் விவாதம் நடக்கிறது. மணிப்பூர் கலவரம் இன்னமும் ஓயவில்லை. இதற்கெல்லாம் மோடி வாய் திறக்க மறுக்கிறார்.
உலகம் சுற்றும் மோடிக்கு மணிப்பூருக்கு செல்ல மனமில்லை. மணிப்பூரை தொடர்ந்து ஹரியானவில் கலவரம் நடக்கிறது. இந்த பிரச்சினைகளில் இருந்தெல்லாம் மக்களை திசை திருப்பி, எப்படியாவது, எந்த சாகசத்தை நடத்தியாவது ஆட்சி அதிகாரத்திற்கு வரவேண்டும் என்ற குறுகிய ஒற்றை நோக்கத்தை தவிர பாஜகவுக்கு வேறு நோக்கம் ஏதுமில்லை. இந்த நோக்கத்திற்காக புதிது புதிதாக இன்னும் பல பிரச்சினைகளைக் கிளப்புவார்கள்” என்று கொட்டித் தீர்த்த் முத்தரசன் நிறைவாக, “திருவிழா கூட்டத்தில் திருடியவனே, ’திருடன்... திருடன்’ என கத்திக்கொண்டு மக்களின் கவனத்தை திசை திருப்ப ஓடுவான். அதே போன்ற திருவிழா திருடர்கள்தான் பாஜக கும்பல்’’ என்று நறுக் வைத்து முடித்தார்.