பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்: 45 பேர் கைது


அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கக்கோரி சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 45 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர் மாவட்டத்தில் கடந்தாண்டு விவசாயிகள் சம்பா நெல் சாகுபடி செய்த நிலையில், போதிய மழை இல்லாமல் விளைச்சல் குறைந்தது. மேலும், விவசாயிகள் தாங்கள் பயிரிட்ட நெல் பயிர்களுக்கு, பாரத பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக அரியலூர் மாவட்டம் திருமானூர் பிர்காவில் நெல் பயிருக்கு காப்பீடு செய்தவர்களுக்கு காப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால், கீழப்பழுவூர் பிர்காவுக்கு உட்பட்ட கீழக்காவட்டாங்குறிச்சி பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு காப்பீடு திட்டத்தின் கீழ் பணம் வழங்கப்படவில்லை என தெரிகிறது. இது குறித்து விவசாயிகள் வேளாண்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்டதற்கு உரிய பதில் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த விவசாயிகள் இன்று (செப்.24) கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மேலும், கடந்த 3 ஆண்டுகளாகவே தங்களுக்கு பயிர்க் காப்பீட்டுத் தொகை தரப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினார். இது குறித்து தகவலறிந்து அங்கு சென்ற திருமானூர் போலீஸார் மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 45 பேரை கைது செய்து, திருமானூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர்.

x