“மத்திய பிரதேசத்தில் பாஜக 50 தொகுதிகளில் வெற்றி பெற்றால் எனது முகத்தில் கருப்புமை பூசிக்கொள்கிறேன்” என அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ-வான பூல்சிங் பரய்யா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அங்கு பாஜக 163 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதையடுத்து தான் கூறியபடியே பூல்சிங் பரய்யா முகத்தில் கருப்பு மை பூசிக்கொண்டார்.
மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் 230 சட்டப் பேரவைத் தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் ஏற்கெனவே பாஜக ஆட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, “பாஜக 50 தொகுதிகளில் வெற்றி பெற்றால் எனது முகத்தில் கருப்புமை பூசிக்கொள்கிறேன்” என அம்மாநில காங்கிரஸ் எம்எல்ஏ-வான பூல்சிங் பரய்யா சவால் விடுத்திருந்தார்.
கடந்த 3-ம் தேதி வெளியான தேர்தல் முடிவுகளில் பாஜக 163 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்டது. இந்தத் தேர்தலில் பந்தர் சட்டப் பேரவையில் போட்டியிட்ட பூல்சிங் பரய்யா, 82,043 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கன்சியாம் பிரோனியா 52,605 வாக்குகள் பெற்றார்.
இத்தேர்தலில் காங்கிரஸ் 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றது. இருப்பினும் தோல்வியை ஏற்றுக்கொள்ளாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய்சிங், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் நம்பகத்தன்மை குறித்து கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில், போபாலில் கடந்த 7-ம் தேதி நடந்த, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கு எதிரான காங்கிரஸ் கட்சியின் போராட்டத்தில் எம்எல்ஏ பூல்சிங் பரய்யா முகத்தில் கருப்ப மை பூசிக்கொள்ள முயன்றார். அப்போது திக் விஜய் சிங், கருப்பு மையை பெற்று அடையாளமாக அவரது முகத்தில் சிறிதளவு இட்டார்.
அப்போது பேசிய திக் விஜய் சிங், “பூல்சிங் பரய்யா தனது வாக்குறுதியை நிறைவேற்றுபவர். மத்திய பிரதேச தேர்தலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டபோது பாஜக 50 தொகுதிகளில் கூட முன்னிலை பெற இயலாமல் பின் தங்கியே இருந்தது. எனவே, பூல்சிங் பரய்யாவின் கணிப்பு நிரூபணமாகியுள்ளது. ஜனநாயகத்தை படுகொலை செய்ததற்காக பாஜகவினர் தான் தங்கள் முகத்தில் கருப்பு மை பூசிக்கொள்ள வேண்டும்” என்றார்.