அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது சொத்துக்குவிப்பு வழக்கு - லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் அதிரடி


தஞ்சாவூர்: அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவித்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

2011 ஆம் ஆண்டில் இருந்து 2016ஆம் ஆண்டு வரை ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியின் தமிழக வீட்டு வசதித்துறை அமைச்சராக ஆர். வைத்திலிங்கம் பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் வைத்திலிங்கம் மீது தஞ்சாவூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்துக் குவித்ததாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 2011-16 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்தைவிட 1058% அதிகமாக ரூ.33 கோடி சொத்து சேர்த்ததாக வைத்திலிங்கம் மீது குற்றம் சாட்டபட்டுள்ளது.

முன்னதாக, தஞ்சாவூர் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார், ரூ.27.90 கோடி முறைகேடாக பெற்ற விவகாரத்தில் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், அவரது மூத்த மகன் பிரபு உள்ளிட்டோர் மீது 5 பிரிவுகளின் கீழ் கடந்த 19-ம் தேதி வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில் வைத்திலிங்கம் மீது சொத்துக்குவிப்பு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய 4 அமைச்சர்களில் ஒருவராக இருந்தவர் ஆர்.வைத்திலிங்கம். இவர் 2011 - 16 காலகட்டத்தில் வீட்டுவசதித் துறை, வனத்துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட துறைகளுக்கு அமைச்சராக பொறுப்பு வகித்தவர். மேலும் மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வைத்துள்ளார். தற்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளராக இருக்கும் வைத்திலிங்கம், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.

x