தமிழக மீனவர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு... ஓபிஎஸ் வாக்குறுதி!


ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் வேட்புமனு தாக்கல்

பிரதமருடன் நேரடியாக பேசி மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பேன் என ராமநாதபுரத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாக்குறுதி அளித்துள்ளார்.

வங்கக்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் தாக்குதலுக்கு உள்ளாவதும், சிறைபிடிக்கப் படுவதும் அண்மைக் காலங்களில் அதிகரித்துள்ளது. இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஒரு நிரந்தரத் தீர்வு வேண்டும் என்று தமிழக மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் இதற்கு நிரந்தர தீர்வு காண முயற்சிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ.ப்ன்னீர்செல்வம் உறுதியளித்துள்ளார்.

ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில் சுயேட்சையாக ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். இந்த நிலையில் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்களின் குடும்பத்தினரை நேற்று அவர் சந்தித்து பேசினார்.

இலங்கை நீதிமன்றத்தால் தண்டனை விதிக்கப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 53 மீனவர்களையும், பறிமுதல் செய்யப்பட்டுள்ள படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் சார்பில் அவரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

ஓ.பன்னீர் செல்வம்

அதையடுத்து அங்கிருந்தவாறு இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டைமான் உள்ளிட்டவர்களிடம் செல்போன் மூலம் பேசிய அவர் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுப்பது குறித்து பேசினார்.

பின்னர் மீனவர்கள் மத்தியில் பேசிய அவர், "இலங்கைச் சிறையில் உள்ள அனைத்து மீனவர்களையும் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன். மீனவர்கள் படும் அனைத்து கஷ்டங்களையும் முழுமையாக அறிந்தவன் நான். அதனால் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கவும் மீனவர்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் மீன் பிடிப்பதற்கும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும் பிரதமர் மோடியிடம் நேரடியாக பேசி நடவடிக்கை எடுப்பேன். மீனவர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்து நிரந்தர தீர்வு காணப்படும்' என்றார்.

x