தொல்லியல் ஆய்வை வீட்டிலிருந்தே தொடங்குங்கள்: மாணவர்களுக்கு மாவட்ட முதன்மை நீதிபதி அறிவுறுத்தல் 


காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் பேசுகிறார் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ப.செம்மல்.

காஞ்சிபுரம்: மாணவர்கள் தொல்லியல் ஆய்வை தங்கள் இல்லங்களில் இருந்தே தொடங்க வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ப.செம்மல் வலியுறுத்தினார்.

காஞ்சிபுரம் பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் தமிழ்துறை சார்பில் இலக்கிய மன்ற விழா மற்றும் தொல்லியல் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் ஆகிய முப்பெரும் விழா இன்று (செப்டம்பர் 24-ம் தேதி) நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை நீதிபதி ப.செம்மல் தொல்லியல் கண்காட்சியை தொடங்கி வைத்து பேசியதாவது: ''இப்போதுள்ள மாணவர்களுக்கு அப்பா, தாத்தா, தாத்தாவின் அப்பா, தாத்தாவின் தாத்தா ஆகியோரது பெயர்கள் மட்டுமே தெரியும். அதற்கு முந்தியவர்கள் பெயர்கள் தெரியாது. அதையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். தொல்லியல் ஆய்வு என்பதை தமது இல்லங்களில் இருந்தே மாணவர்கள் தொடங்க வேண்டும். நாம் யார் ஜீனின் தொடர்ச்சி என்பதை நாம் அறிய வேண்டும்.

தமிழர்களுக்கென்று பாரம்பரியம் உள்ளது. அவர்கள் குறிஞ்சி, மருதம், நெய்தல், முல்லை என்ற நான்கு நிலங்களிலும் வாழ்ந்தவர்கள். வேட்டை சமுதாயமாக இருக்கும் போதே கூடி வாழ்ந்தவர்கள். நேரம் தவறாமையை இயற்கையோடு இணைந்து பின்பற்றியவர்கள்.

கரிசலாங் குருவி சத்தமிடும் அதிகாலை 3.30 மணிக்கு ஆண்டாள் வழிபாட்டை தொடங்குவார்கள். கரிசலாங் குருவியைத் தொடர்ந்து குயிலும் அதன் பின்னர் சேவலும் சத்தமிடும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு நம் முன்னோர்கள் நேரம் தவறாமையைக் கடைபிடித்து வந்துள்ளனர். மாணவர்கள் நேரம் தவறாமையை கடைபிடிப்பது அவசியம்.

தமிழகத்தில் முதல்வர்களாக இருந்த அண்ணாதுரை, கருணாநிதி, ஜெயலலிதா போன்றார் வாசிக்கும் திறன் உள்ளவர்கள். வாசிக்கும் திறன் உங்களை உயர்த்தும். அதேபோல் கல்வியிலும் மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். சமீபத்தில் நடைபெற்ற நீதிபதிகள் தேர்வில் பெண்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெண்கள் நீதிபதிகளாக வருவது மகிழ்ச்சிக்குரியது'' என்றார்.

இந்த நிகழ்ச்சியில் தொல்லியல் ஆய்வாளர் ஜவஹர்பாபு, தமிழ்துறை உதவி பேராசிரியர்கள் மு.நஜ்மா, தே.வேல்விழி ஆகியோர் பங்கேற்றனர். தொல்லியல் கண்காட்சியில் பழங்கால கருவிகள், நாணயங்கள், செப்பேடுகள் முதலியவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

x