புறவழிச் சாலை திட்டத்துக்காக சிவகங்கையில் 9 நரிக்குறவர் வீடுகள் பறிப்பு!


பாதிக்கப்பட்ட நரிக்குறவர் குடும்பங்கள்.

சிவகங்கை: சிவகங்கை புறவழிச் சாலை திட்டத்துக்காக வீடுகள் பறிபோன நிலையில், தகரக் கொட்டகையில் தங்க வைக்கப்பட்ட 9 நரிக்குறவர் குடும்பங்கள் இடவசதியின்றி சிரமப்பட்டு வருகின்றன.

சிவகங்கை நகருக்குள் கனரக வாகனங்கள் வருவதை தடுக்க, நெடுஞ்சாலைத் துறை சார்பில் திருப்பத்தூர் சாலையில் காஞ்சிரங்காலில் இருந்து மானா மதுரை சாலையில் கீழக்கண்டனி வரை 10.6 கி.மீட்டருக்கு ரூ.109.51 கோடியில் புறவழிச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

இதில் முதல் கட்டமாக காஞ்சிரங்காலில் இருந்து இளை யான்குடி சாலையில் கல்குளம் வரை 7.6 கி.மீட்டருக்கு ரூ.77.16 கோடிக்கு புறவழிச் சாலை அமைக் கப்பட்டு வருகிறது. இப்பணியை கடந்த ஆண்டு நவ.19-ம் தேதி அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்.

இச்சாலைப் பணிக்காக பழமலை நகரில் 9 நரிக்குறவர் குடும்பங்களின் வீடுகள் இடிக்கப்பட்டன. வீடுகளை காலி செய்த அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்ட நிலையில், வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை. இதனால் அவர்கள் தங்குவதற்கு இடமின்றி தவித்து வந்தனர்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜித் உத்தரவின்பேரில், ஒப்பந்ததாரர் தகரக் கொட்டகை அமைத்து கொடுத்தார். அதில் 9 குடும்பங்கள் தங்குவதற்காக பிரித்து கொடுக்கப்பட்ட அறை களில் பொருட்கள் வைக்க மட் டுமே இடவசதி உள்ளது. ஆட்கள் தங்க முடியாத நிலை உள்ளது.

சிவகங்கை பழமலை நகரில் தார்பாய் கொட்டகை அமைத்து
தங்கியுள்ள நரிக்குறவர் குடும்பம்.

இதனால் அவர்கள் அருகிலேயே தார்பாய், கீற்றுக் கொட்டகை அமைத்து தங்கி வருகின்றனர். மேலும், தகரக் கொட்டகையில் மின்சார வசதி செய்து தரப்படவில்லை. இந்நிலை யில், சமீபத்தில் பெய்த மழையில் தண்ணீர் உள்ளே புகுந்ததால் சமைக்க முடியாமலும், தூங்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர் கள் கூறுகையில், சாலைப் பணிக்காக எங்களது வீடுகளை 6 ஆண்டுகளுக்கு முன்னரே இடிக்கப்போவதாகக் கூறினர். வீடு கட்டிக் கொடுத்தால்தான் காலி செய்வோம் என்று கூறினோம். இதையடுத்து, இடம் மட்டும் ஒதுக்கி கொடுத்தனர். ஆனால், வீடு கட்டித் தரவில்லை. தற்போது எங்களது வீடுகளை இடித்துவிட்டனர்.

நாங்கள் ஆட்சியரிடம் முறையிட்டதை அடுத்து, தற் காலிகமாக தகரக் கொட்டகை அமைத்து கொடுத்தனர். ஆனால், அதில் பொருட்களை மட்டுமே வைக்க முடிகிறது. தூங்கக்கூட வசதி இல்லை. இதனால் வெளியில்தான் தூங்குகிறோம்.

ஆனால் தற்போது மழை பெய்து வருவதால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகிறோம். எங்களுக்கு உடனடியாக அரசு வீடுகள் கட்டிக் கொடுக்க வேண்டும். அல்லது இழப்பீடு தொகை அளித்தால் நாங்கள் கட்டிக் கொள் வோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

x