தஞ்சை, சேலத்தில் ரூ.60 கோடியில் மினி டைடல் பூங்கா: முதல்வர் ஸ்டாலின் காணொலியில் திறந்து வைத்தார்


சென்னை: தஞ்சாவூர் மற்றும் சேலம் மாவட்டங்களில் ரூ.60 கோடியில் கட்டப்பட்டுள்ள மினி டைடல் பூங்காக்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலியில் திறந்துவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவிலேயே இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழகத்தை, 2030-ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை நிர்ணயித்து, அதற்கான முன்னெடுப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செய்து வருகிறது.

அந்தவகையில், தமிழகத்தின் தகவல் தொழில்நுட்ப சூழலமைப்பை மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தும் வகையில், 2 மற்றும் 3-ம் நிலை நகரங்களில் மினிடைடல் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. அதில் விழுப்புரத்தில், மினி டைடல் பூங்காவை கடந்த பிப்.17-ம் தேதி முதல்வர் திறந்துவைத்தார்.

இதன் தொடர்ச்சியாக, தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி கிராமத்தில் ரூ.30.50 கோடியில் தரை மற்றும் 3 தளங்களுடன் 55ஆயிரம் சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ள மினி டைடல் பூங்காவைமுதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். இந்த கட்டிடத்தில், ஹாம்லி பிசினஸ் சொலூஷன்ஸ் மற்றும்இன்ஃபோரியஸ் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் ஆகிய நிறுவனங்களுக்கான தள ஒதுக்கீட்டு ஆணைகளை வழங்கினார். தஞ்சாவூர் மினி டைடல் பூங்கா கட்டிடத்தில் 30 சதவீத தள ஒதுக்கீடு தற்போது வரை வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், சேலம் மாவட்டம்,ஓமலூர், கருப்பூர் கிராமம், ஆனைக்கவுண்டன் பட்டியில் ரூ.29.50 கோடியில் தரை மற்றும் 3 தளங்களுடன் 55 ஆயிரம் சதுர அடியில் மினி டைடல் பூங்காவையும் முதல்வர் திறந்தார். அங்கு, நம்ம ஆபீஸ், ஏகேஎஸ் ஹைடெக் ஸ்மார்ட், தமிழ் சோரோஸ், அக்சஸ் ஹெல்த்கேர் நிறுவனங்களுக்கு தள ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை வழங்கினார். சேலம் மினி டைடல் பூங்கா கட்டிடத்தில் 71 சதவீத தள ஒதுக்கீடுவழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள்கே.என்.நேரு, அன்பில் மகேஸ்,டி.ஆர்.பி.ராஜா, தலைமைச்செயலர் நா.முருகானந்தம், தொழில்துறை செயலர் வி.அருண் ராய், டிட்கோ மற்றும் டைடல் பார்க் மேலாண் இயக்குநர் சந்தீப் நந்தூரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மினி டைடல் பார்க் திறக்கப்பட்டுள்ளது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வெளியிட்ட பதிவில், ‘‘இந்த மினிடைடல் பூங்காக்கள், புதிய பகுதிகளிலும் 2 மற்றும் 3-ம் கட்ட நகரங்களிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான சான்றாகும். இதனால் நம் மாநிலத்தின் திறமைமிக்க இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை சொந்த ஊர்களிலேயே தொடர முடியும். இன்னும் பல மினி டைடல் பார்க்குகள் தொடங்கப்பட உள்ளன. முதல்வரின் டிரில்லியன் டாலர் இலக்கை அடைவதற்கான விரைவுப்பாதையில் நாம் முன்னேறிவருகிறோம்’’ என்றார்.

கூட்டுறவு துறை கட்டிடங்கள்: இதேபோல், நுகர்பொருள் வாணிபக் கழகம் மற்றும் கூட்டுறவுத்துறை சார்பில் ரூ.73.17 கோடியில் கட்டப்பட்ட கிடங்குகள் உள்ளிட்ட கட்டிடங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணிக்காலத்தில் இயற்கை எய்திய 32 பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளையும், 78 பருவகால பணியாளர்களுக்கு பணி நிரந்தர ஆணைகளையும் வழங்கும் அடையாளமாக 3 பேருக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

மேலும், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாகஉதவி வனப் பாதுகாவலர் பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 9 பேருக்கும், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் உதவிப் பொறியாளர் பணியிடத்துக்கு தேர்வு செய்யப்பட்ட 48 நபர்களில், 5 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் துறை அமைச்சர்கள் தலைமைச்செயலர் நா.முருகானந்தம், துறைகளின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

x