மின் ஊழியர்களுக்கு பயோ மெட்ரிக் வருகைப் பதிவு... உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!


தமிழ்நாடு மின்சார வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள மின்வாரிய அலுவலகங்களில், அலுவலர்கள், ஊழியர்களின் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் வருகைப்பதிவு முறையை அமல்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை பரிசீலிக்குமாறு மின்வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம்

கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலாளர் நா.லோகு சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 2019-ம் ஆண்டு பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 'தமிழகத்தில் உள்ள 12 மின் வாரிய மண்டல அலுவலகத்துக்கு உட்பட்ட அனைத்து மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்கள், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர் அலுவலகங்கள், பிரிவு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து மின்வாரிய அலுவலகங்களிலும் ஊழியர்கள், அலுவலர்கள் சரியான நேரத்துக்கு பணிக்கு வருவதில்லை. இதனால் மின்வாரிய அலுவலகத்துக்குச் செல்லும் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, அனைத்து மின்வாரிய அலுவலகத்திலும் ஊழியர்களின் வருகையை பதிவு செய்ய ஆதார் இணைப்புடன் கூடிய பயோ மெட்ரிக் வருகைப்பதிவு கருவியை பொருத்த உத்தரவிட வேண்டும்' என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கில் மின் வாரியம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், 'பயோ மெட்ரிக் பதிவேடு முறையை, தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் நிதிநிலையை கருத்தில் கொண்டு அமல்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மின் வாரியத்தில் நிர்வாகம் மற்றும் கணக்குப் பிரிவு தொழில்நுட்ப பிரிவுகளில், அலுவல் சார்ந்த பணிகள் இருப்பதால் மாநில தலைமையகங்களில் இதை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்சார வாரியம்

மின் உற்பத்தி பிரிவை பொறுத்தவரை, ஏற்கெனவே மின்னணு வருகைப் பதிவு முறை கடந்த 2019-ம் ஆண்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. பகிர்மான பிரிவை பொறுத்தவரை அமல்படுத்துவது தொடர்பாக சாத்திய கூறுகள் மற்றும் நடைமுறைகள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படுகிறது.

வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு நேரடியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் ஏற்படவில்லை. இதில் சில சவால்கள் உள்ளது. பல நாட்களில் ஊழியர்கள் சம்பந்தப்பட்ட களத்துக்கு மட்டுமே செல்லலாம். அதன் பிறகு அலுவலகத்துக்கு வரக்கூடிய சூழ்நிலைகளில், விநியோக பகுதி போன்ற களப் பகுதிகளில் இந்த முறையை நிறுவுவது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தலாம். தடையில்லா மின்சாரம் வழங்குவது தொடர்பான நுகர்வோரின் புகார்கள், குறைகளை நிவர்த்தி செய்வதில் தாமதம் ஏற்படலாம்.

எனவே, பதிலளிப்பவரின் பணியின் தன்மை மிகவும் வித்தியாசமாக இருப்பதால், மின்சாரத் துறைக்கு இந்த முறை நேரடியாகப் பொருந்தாது. இருப்பினும் மின்னணு வருகைப்பதிவு முறையை சரியான நேரத்தில் முழுமையாக நடைமுறைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்

இந்த வழக்கை இன்று விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா, நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மின்வாரிய அலுவலகங்களில், அலுவலர்கள், ஊழியர்களின் வருகையை கண்காணிக்க பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்துவதற்கான சாத்திய கூறுகளை பரிசீலிக்குமாறு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

x