“உதயநிதி பதவிக்கு குரல் கொடுக்கும் திமுக அமைச்சர்களின் முதுகெலும்பு எங்கே?” - செல்லூர் கே.ராஜூ


செல்லூர் கே.ராஜூ

மதுரை: "உதயநிதியை துணை முதல்வராக்க குரல் கொடுக்கும் திமுக மூத்த அமைச்சர்கள், நிர்வாகிகள் முதுகெலும்பு எங்கே போனது" என்று முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் கே.ராஜூ விமர்சனம் செய்துள்ளார்.

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பங்கேற்று பேசியதாவது: "திமுகவை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, நாங்கள் தெய்வமாக மதிக்கும் ஜெயலலிதாவை பற்றி விமர்சனம் செய்துள்ளார். அவர், அம்மா போய் சேர்ந்து விட்டார்கள், அப்புறம் எதற்கு அம்மா உணவகம் என்றும், அம்மா உணவகத்தில் வீணா போன உணவுகளை தான் பரிமாறப்பட்டது என்றும், இரவில் சப்பாத்தி குருமா ஆகிவற்றை பீகார், உத்தர பிரதேஷ் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான் சாப்பிடுகிறார்கள் என்று கிண்டில் செய்துள்ளார்.

ஏழை தொழிலாளர்கள், மக்கள் பயன்பெறும் வண்ணம் 650 அம்மா உணவகத்தை ஜெயலலிதா தொடங்கினார். பல்வேறு வெளிநாட்டவர் கூட இதை பாராட்டினர். மற்ற மாநில அரசுகள் பாராட்டினர். கடந்த அதிமுக ஆட்சியில் ஏற்பட்ட கரோனா காலங்களில் அம்மா உணவகம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக ஏழை மக்களுக்கு அமைந்தது. அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் இலவசமாக அம்மா உணவங்களில் உணவு வழங்கினர். ஆனால், ஆர்.எஸ்.பாரதி, ஏழை மக்கள் பயன்பெறும் அம்மா உணவகங்களை விமர்சனம் செய்கிறார்.

கருணாநிதி பெயரில் உள்ள திட்டங்களை நேரடியாக விமர்சிக்க துணிவு இல்லாமல் இப்படி மறைமுகமாக அவர் எதிர்ப்பு தெரிவிக்கிறாரா? மேலும் மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன் அதிமுகவிற்கு முதுகெலும்பு வளைந்து விட்டது. கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக, பாஜக அரசை எதிர்த்து அரசியல் செய்கிறோம். ஆனால், திமுக அரசோ, மத்திய அரசை பேச அஞ்சி, அடிமை அரசாக உள்ளது. அதிகாரம் இருந்தும் மத்திய அரசிடம் பேசி நிதியோ, திட்டங்களையோ பெற முடியவில்லை. யாருக்கு முதுகெலும்பு இல்லை என்று தயாநிதி மாறன் விளக்க வேண்டும்.

திமுக மூத்த அமைச்சர்கள், சுயமரியாதை விட்டுக் கொடுத்துவிட்டு, உதயநிதியை துணை முதல்வராக வர வேண்டும் என்று ஒட்டுமொத்தமாக குரல் கொடுக்கின்றனர். உதயநிதி விஷயத்தில் திமுகவினரின் முதுகெலும்பை ஒட்டுமொத்தமாக வளைத்து குனிந்து நிற்கிறதா? அல்லது எங்கே போனது?. முதலில் ஜெயலலிதாவையும், அதிமுகவையும் விமர்சனம் செய்யும் திமுக அமைச்சர்கள், நிர்வாகிகள், முதலில் தங்களையும், தங்கள் கட்சியையும், ஆட்சியையும் சுய பரிசோதனை செய்து பார்க்க வேண்டும்" என்று செல்லூர் ராஜு கூறினார்.

x