எங்க தொகுதிக்கு என்னதான் ஆச்சு?... கலங்கும் மயிலாடுதுறை காங்கிரஸ்!


மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கு அனைத்துக் கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் மட்டும் இன்னும் அறிவிக்கப்படாததால் அங்குள்ள காங்கிரஸ் கட்சியினர் பெரும் மனக்குழப்பத்தில் உள்ளனர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசுக்கு தமிழ்நாட்டில் 9 மற்றும் புதுச்சேரி ஒன்று என 10 மக்களவைத் தொகுதிகளை திமுக வழங்கியது. இவற்றில் போட்டியிட அக்கட்சியின் சார்பில் பெரிய அளவில் போட்டி ஏற்பட்டதால் வேட்பாளர்களை தேர்வு செய்ய முடியாமல் காங்கிரஸ் மேலிடம் தவித்து வந்தது.

இதனால் பெரும் குழப்பம் ஏற்பட்ட நிலையில் ஒரு வழியாக ஏழு தொகுதிகளுக்கும், புதுச்சேரிக்கும் முதல்கட்டமாக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். கடும் போட்டி காரணமாக திருநெல்வேலி மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்க முடியவில்லை. இந்நிலையில் நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் திருநெல்வேலியில் பிரச்சாரம் மேற்கொண்டார். மாலையில் கூட்டம் நடைபெறும் வரை வேட்பாளர் பெயரை அறிவிக்காத நிலையில் தாங்களே வேட்பாளர் அறிவிக்க நேரிடும் என்று ஸ்டாலின் காங்கிரஸாரை எச்சரித்ததாக கூறப்படுகிறது. அதனால் கூட்டத்திற்கு சற்று நேரம் முன்பாக திருநெல்வேலி வேட்பாளராக ராபர்ட் புரூஸ் அறிவிக்கப்பட்டார்.

மணிசங்கரய்யர்

ஆனாலும் இன்று காலை வரை மயிலாடுதுறை தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் என்ன செய்வது என்று திமுக கூட்டணிக் கட்சிகள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளன. இங்கு போட்டியிடுவதற்கு மணிசங்கரய்யர் மற்றும் அவரது மகள், பட்டுக்கோட்டை ராஜேந்திரன், பிரவீன் சக்கரவர்த்தி மற்றும் திருநாவுக்கரசர் ஆகியோர் கடும் பிரயத்தனம் செய்து வருகிறார்கள்.

இவர்களில் யாருக்கு கொடுத்தாலும் மற்றவர்கள் பிரச்சினை செய்வார்கள் என்பதால் இவர்களை சமாதானப்படுத்த முடியாமல் கட்சித் தலைமை திண்டாடி வருகிறதாம். எதுவாகினும் இன்று மாலைக்குள் யாராவது ஒருவரை வேட்பாளராக அறிவித்தால் தான் தேர்தல் பணிகளை தொடங்க முடியும், நாளை வேட்பு மனுத் தாக்கல் செய்ய முடியும் என்ற நிலையில் உடனடியாக வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

பொதுவாக வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன் தொகுதியில் உள்ள முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள் கூட்டணிக் கட்சியினரை சந்தித்து முதலில் சால்வை அணிவித்து தங்களுக்கு ஆதரவு கேட்பது வேட்பாளர்களின் வழக்கம். இதுவரை வேட்பாளரை அறிவிக்காததால் இனிமேல் வேட்பு மனு செய்யவும், அதைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்யவும் மட்டும் தான் நேரம் இருக்கும். இதனால் கூட்டணிக்குள் ஒருங்கிணைப்பை எப்படி ஏற்படுத்துவது என்று தெரியாமல் திமுகவினர் தவித்து வருகின்றனர். யார் தான் வேட்பாளராக அறிவிக்கப்படுவார்கள் என்று காங்கிரஸ் கட்சியினரும் குழப்பத்தில் இருந்து வருகின்றனர்.

x