மதுரை அரசு மருத்துவமனையில் பெயர்ந்து விழுந்த கான்கிரீட் கூரை - அலறிய நோயாளிகள்


மதுரை: மதுரை அரசு மருத்துவமனை கட்டிடத்தின் மேல் கூரை திடீரென பெயர்ந்து விழுந்ததால் புறநோயாளிகள் அலறி அடித்து ஓடினர்.

மதுரை பனகல் சாலை பகுதியிலுள்ள மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் பழைய கட்டிடத்தின் வடக்குப் புறத்தில் புறநோயாளிகளுக்கான நுழைவுச் சீட்டு வழங்கும் கவுன்டர் செயல்படுகிறது. தினமும் காலை 7 மணி முதல் நுழைவுச் சீட்டு வழங்குவது வழக்கம். இதன்படி, இன்று காலை ஏராளமான புறநோயாளிகள் சீட்டு வாங்குவதற்கு நீண்ட வரிசையில் நின்றனர். அப்போது அவர்களுக்கு எதிரே இருந்த மருத்துவமனை கட்டிடத்தின் மேல் கூரையின் கீழ் பகுதியில் இருந்த கான்கிரீட் கட்டுமானம் திடீரென இடிந்து விழுந்து சிதறின.

இதைக்கண்டு அங்கு வரிசையில் நின்ற புறநோயாளிகள் அலறி அடித்து ஓடினர். இந்தச் சம்பவத்தில் நுழைவுச் சீட்டு எழுதிக் கொடுக்க பயன்படுத்திய மர டேபிள் ஒன்று நொறுங்கி சேதமடைந்தது. எதிர் திசையில் நின்றதால் அதிர்ஷ்டவசமாக புறநோயாளிகள் காயமின்றி தப்பினர். இல்லையென்றால் பல பேர் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும்.

இதுபற்றி தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். இடிந்து விழுந்த கட்டிட கழிவுகள் உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இச்சம்பவம் அரசு மருத்துவமனையில் சற்று நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

x