மதுரையில் கண்ணகி போல் கையில் சிலம்புடன் நீதி கேட்டு ‘டெட்’ தேர்ச்சி அடைந்தோர் ஆர்ப்பாட்டம்!


மதுரையில் இன்று 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப்பெற்றோர் நலச்சங்கத்தினர் கண்ணகி போல் கையில் சிலம்புடன் நீதி கேட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மதுரை: மதுரையில் இன்று கண்ணகி போல் கையில் சிலம்பு ஏந்தி நீதி கேட்கும் வகையில் 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

தேர்ச்சி பெற்றோர் நலச்சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் ம.இளங்கோவன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் வடிவேல் சுந்தர் முன்னிலை வகித்தார். இதில் மாநில ஒருங்கிணைப்பாளர் ம.இளங்கோவன் பேசுகையில்,"2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றும் 11 ஆண்டுகளாக பணியின்றி தவித்து வருகிறோம். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் மீண்டும் இன்னொரு நியமனத் தேர்வு (அரசாணை எண்:149) என்ற இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத நடைமுறையை தமிழக அரசு பின்பற்றுகிறது.

தமிழக முதல்வர், எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது இந்த அரசாணை எண்:149-ஐ கண்டித்தார். 2021 திமுக தேர்தல் அறிக்கையில், இதை ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்தார். ஆனால், இதுவரை அதை நிறைவேற்றவில்லை. எனவே, மறு நியமன போட்டித் தேர்வை முற்றிலும் நீக்க வேண்டும், திமுக தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட 4 ஆயிரம் ஆசிரியர்களை குறைந்தபட்ச தொகுப்பூதியத்திலாவது பணி அமர்த்த தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

மாநிலப் பொருளாளர் ஹரிஹரசுதன், மாநில அமைப்பாளர் சொ.ஸ்ரீதர் உள்பட பலர் பங்கேற்று பேசினர். முடிவில் மாநிலச் செயலர் சொ.சண்முகப் பிரியா நன்றி கூறினார். இதில், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

x