தேர்வுக்குழு பரிந்துரை பட்டியலில் இடம் பெறாதவர் கரூர் மாவட்ட காஜியாக நியமனம்: ரத்து செய்தது ஐகோர்ட் கிளை


மதுரை: கரூர் மாவட்ட காஜியாக தேர்வுக் குழு பரிந்துரை பட்டியலில் இடம் பெறாதவரை நியமித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

கரூரைச் சேர்ந்த ராஜ் கபூர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் 2021ல் தாக்கல் செய்த மனுவில், "கரூர் மாவட்டத்தில் அரசு காஜியாக சிராஜு தீன் அகமத் ரஷாதி என்பவர் நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தின் உரிய விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. இதனால் காஜி நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.முரளி சங்கர், "கரூர் மாவட்ட காஜி பணியிடம் 2021ல் காலியானது. இதனால் புதிய காஜியை தேர்வு செய்ய மாவட்ட ஆட்சியர் குழு அமைத்தார். காஜி பணிக்கு விண்ணப்பித்த 8 பேரில் 3 பேர் தேர்வு செய்யப்பட்டு பட்டியல் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டது. இதையடுத்து 2021 நவம்பரில் சிராஜு தீன் அகமத் ரஷாதி, கரூர் அரசு டவுன் காஜியாக நியமனம் செய்யப்பட்டார். ஆனால், காஜி தேர்வுக் குழு அளித்த பட்டியலில் இவரது பெயர் இடம் பெறவில்லை.

இருப்பினும் அவர் அரசு காஜியாக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது தேர்வுக் குழுவின் பரிந்துரை பட்டியலில் இடம் பெறாத நபர் எவ்வாறு அரசு காஜியாக தேர்வு செய்யப்பட்டார் என்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கான ஆவணங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

தேர்வுக் குழு பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றிருந்த இருவருக்கு குழுவின் பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், காஜியாக நியமிக்கப்பட்டவருக்கு அவரது மகனைத் தவிர வேறு யாரும் ஆதரவு அளிக்கவில்லை. இப்படியான நிலையில் அவர் எப்படி காஜியாக தேர்வு செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக ஆவணங்களை தமிழக பிற்படுத்தப் பட்டோர் அமைச்சகம் தாக்கல் செய்யவில்லை.

மாவட்ட காஜியை நியமிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. இருப்பினும் அந்த நியமனம் உரிய விதிமுறைகளை பின் பற்றி நடைபெற வேண்டும். இதனால் விதிப்படி நடைபெறாததால் கரூர் மாவட்ட காஜியாக சிராஜு தீன் அகமத் ரஷாதி நியமனம் செய்யப்பட்ட உத்தரவு ரத்து செய்யப் படுகிறது. விதிமுறைகளை முறையாக பின்பற்றி வெளிப்படைத் தன்மையுடன் கரூர் மாவட்ட காஜியை தேர்வு செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என உத்தரவிட்டார்.

x