மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பலத்த மழை: குற்றாலம் அருவிகளில் மீண்டும் குளிக்க தடை


பழைய குற்றாலம் அருவியில் நேற்று காலையில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்ட நிலையில் மழையால் நீர்வரத்து அதிகரித்ததால் மீண்டும் தடை விதிக்கப்பட்டது.

திருநெல்வேலி/ தென்காசி: திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்திருந்தது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 464.2 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த கோடையில் பதிவான அதிகபட்ச மழையளவு இதுவாகும்.

அதிகபட்சமாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான நாலுமுக்கில் மட்டும் 103 மி.மீ. மழை கொட்டியுள்ளது. இதுபோல் மாஞ்சோலையில் 43 மி.மீ., காக்காச்சியில் 66 மி.மீ., ஊத்து பகுதியில் 78 மி.மீ. மழை பெய்திருந்தது. மாவட்டத்தில் அணைப்பகுதிகள் மற்றும் பிறஇடங்களில் பெய்த மழையளவு (மி.மீட்டரில்):

பாபநாசம்- 50, சேர்வலாறு- 28, மணிமுத்தாறு- 9.8, கன்னடியன் அணைக்கட்டு- 16.6, கொடுமுடியாறு- 23, அம்பாசமுத்திரம்- 2, சேரன்மகாதேவி- 6.6, ராதாபுரம்- 10, நாங்குநேரி- 5, களக்காடு- 12.5, மூலைக்கரைப்பட்டி- 4, பாளையங்கோட்டை- 5.4, திருநெல்வேலி- 1.4.

குற்றாலம் பிரதான அருவியில் நேற்று தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

ஒரே நாளில் 5 அடி உயர்வு: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த பலத்த மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் 143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்து 57.30 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 2,949 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 338 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

இதுபோல் 156 அடி உச்சநீர்மட்டம் கொண்ட சேர்வலாறு அணை நீர்மட்டம் 9 அடி உயர்ந்து 73 அடியை எட்டியிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 85 அடியாக இருந்தது. அணைக்கு 381 கனஅடி தண்ணீர் வந்தது. அணையிலிருந்து 345 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

கடந்த ஆண்டு இதே நாளில் பாபநாசம் அணை நீர்மட்டம் 24.75 அடியாகவும், மணிமுத்தாறு நீர்மட்டம் 66.15 அடியாகவும், சேர்வலாறு நீர்மட்டம் 48.29 அடியாகவும் இருந்தது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் மழையால்
பணகுடி குத்திரபாஞ்சான் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது.

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கடந்த 2 வாரமாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பல்வேறு பகுதிகளில் மழை நீடித்தது.

நேற்று காலை வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணை, தென்காசியில் தலா 18 மி.மீ., கடனாநதி அணையில் 17, ஆய்க்குடியில் 14, ராமநதி அணையில் 10, குண்டாறு அணையில் 6.20, கருப்பாநதி அணையில் 5.50, செங்கோட்டை, சங்கரன்கோவிலில் தலா 4 , சிவகிரியில் 3 மி.மீ. மழை பதிவானது.

கடந்த 17-ம் தேதி மலைப்பகுதியில் பெய்த மழையால் பழைய குற்றாலம் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்ட திருநெல்வேலியைச் சேர்ந்த சிறுவன் அஸ்வின் (17) உயிரிழந்தார்.

இதையடுத்து, மறு உத்தரவு வரும் வரை குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிக்க தடை விதித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் உத்தரவிட்டார்.

கன்னிமாரான்தோப்பு ஓடையில் பாய்ந்தோடும் தண்ணீர்.

அருவிகளில் குளிக்க மீண்டும் தடை: இந்நிலையில் நேற்று முன்தினம் மாலையில் ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பில் ஐந்தருவி, சிற்றருவி, புலியருவியில் குளிக்க தடை உடனடியாக நீக்கப்படுவதாகவும், பழைய குற்றாலம் அருவியில் 24-ம் தேதி (நேற்று) காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டும் அனுமதிக்கப்படும் என்றும், 24-ம் தேதி மாலை 4 மணி முதல் குற்றாலம் பிரதான அருவியிலும் குளிக்க அனுமதிக்கப்படும் என்றும் கூறியிருந்தார்.

ஐந்தருவியில் தடை நீக்கப்பட்டாலும் நேற்று முன்தினம் மாலையில் நீர் வரத்து அதிகரித்ததால் அங்கு குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஒரு வார தடைக்கு பின்னர் நேற்று காலையில் பழைய குற்றாலம், ஐந்தருவியில் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்தனர்.

ஆனால் மீண்டும் மழை பெய்து நீர் வரத்து அதிகரித்ததால் சில மணி நேரங்களில் பழைய குற்றாலம் அருவி, ஐந்தருவியில் குளிக்க மீண்டும் தடை விதிக்கப்பட்டது. நீர் வரத்தை கண்காணித்து சூழ்நிலைக்கு தகுந்தவாறு குளிக்க அனுமதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சிற்றருவி, புலியருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்துச் சென்றனர்.

பணகுடி குத்திரபாஞ்சான் அருவியில் நீர்வரத்து விவசாயிகள் மகிழ்ச்சி: திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்துவரும் மழையால் பணகுடி குத்திரபாஞ்சான் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால் 10-க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் வந்துசேரும் என்பதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் காரணமாக திருநெல்வேலி மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர் மழை பெய்துவரும் நிலையில் பணகுடி குத்திரபாஞ்சான் அருவியில் தண்ணீர் கொட்டுகிறது. இந்த அருவியில் குளிக்க வனத்துறை தடைவிதித்துள்ளதால் யாரும் அங்கு குளிக்க செல்வதில்லை.

அதேநேரத்தில் அருவிக்கு அருகேயுள்ள கன்னிமாரான்தோப்பு ஓடையில் பாய்ந்தோடும் தண்ணீரில் சுற்றுலா பயணிகளும், உள்ளூர் பகுதி மக்களும் குளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் இங்கு சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கிறார்கள்.

இந்நிலையில் இப்பகுதியில் பெய்துவரும் மழையால் இங்குள்ள அனுமன் நதி பாசன பகுதிகளில் உள்ள பரிவிரி சூரியன்குளம், வீரபாண்டிய குளம் , அண்ணாத்தி குளம் , சன்னேரி குளம் , கடம்பன்குளம் , மானாவாரி குளம் உட்பட 10 க்கும் மேற்பட்ட குளங்களுக்கு நீர் வரும் வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

x