அதிகாலையிலேயே செங்கல்பட்டு, ஆம்பூரில் நில அதிர்வு! பீதியில் மக்கள்


செங்கல்பட்டு மற்றும் ஆம்பூரில் இன்று காலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் வீதிக்கு ஓடிவந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அண்மையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இந்த பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். வீட்டை சுற்றி தேங்கியுள்ள மழை நீர் தற்போது வடிய தொடங்கியிருக்கிறது. இது சற்று ஆறுதலை ஏற்படுத்தியிருந்த நிலையில் செங்கல்பட்டு பகுதியில் இன்று காலை திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டது.

இந்த நிலநடுக்கம் அளவுகோலில் 3.2 ஆக பதிவானதாக நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நிலநடுக்கத்தால் வீட்டில் இருந்த மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீதிக்கு ஓடிவந்தனர். இந்த நிலநடுக்கம் காலை 7.39 மணிக்கு ஏற்பட்டுள்ளதாக நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. பூமிக்கு அடியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் லேசான நில அதிர்வு ஏற்பட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது. நிலநடுக்கத்தின் தாக்கம் 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு இருந்ததாகவும் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பெரிய அளவு பாதிப்பு ஏற்படவில்லை என்றும் நிலநடுக்க ஆய்வு மையம் கூறியிருக்கிறது.

மேலும், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சுற்று வட்டார பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

x