மதுரை ஏவி மேம்பாலத்துக்கு இன்று 138-வது பிறந்த நாள்... பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படுமா?


மதுரை ஏவி மேம்பாலத்திற்கு வயது 138

இன்று டிசம்பர் 8-ம் தேதி மதுரை ஏவி மேம்பாலம் தனது 138-வது பிறந்தநாளை கொண்டாடுகிறது. இதை முன்னிட்டு ஏவி பாலத்தை பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற தங்களின் பல ஆண்டு கோரிக்கை நிறைவேறுமா என்ற ஏக்கத்தில் இருக்கிறார்கள் மதுரை மக்கள்.

1886-ம் ஆண்டுக்கு முன்பு வரை மதுரை கோரிப்பாளை யத்திலிருந்து அக்கரைக்கு வைகை ஆற்றை கடந்து செல்ல மக்கள் பரிசல்களை பயன்படுத்தி வந்தனர். வடகரையில் உள்ள கோரிப்பாளையம் பகுதியில் இருந்து தென் கரையில் உள்ள சிம்மக்கல் பகுதிக்கு வர வண்டி மாடு பூட்டிக்கொண்டு பல கிலோமீட்டர்கள் சுற்றி வர வேண்டிய நிலை இருந்தது. வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், பரிசல் பயணமும் நிறுத்தப்பட்டு, மக்கள் நீண்ட தூரம் கால்நடையாக பயணிக்க வேண்டி இருக்கும்.

பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்படுமா? மக்கள் எதிர்பார்ப்பு

1886-ல் ஆங்கிலேய அரசில் மதுரை மாவட்ட ஆட்சிராக ஆல்பர்ட் விக்டர் என்பவர் இருந்தார். சிவில் இஞ்சினியரான இவர், வைகை ஆற்றின் மீது மேம்பாலம் ஒன்று கட்டினால் மழைக்காலங்களின் போதும் போக்குவரத்து நடைபெற வசதியாக இருக்கும் என கருதினார். மேலும், கிளர்ச்சி எதுவும் நடைபெற்றால், படைகளை உடனடியாக தெப்பக்குளம் பகுதிக்கு அழைத்துச் செல்லவும் இது வசதியாக இருக்கும் என அவர் கருதினார். இது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை வைத்து ஒப்புதல் பெற்ற ஆல்பர்ட் விக்டர், மிகுந்த பொருட்செலவில், 12 மீட்டர் அகலம், 250 மீட்டர் நீளத்தில், 16 வளைவு வடிவ தூண்களுடன் மேம்பாலத்தை கட்டமைத்தார்.

சேதமடைந்துள்ள வளவு தூண்களை சீரமைக்க கோரிக்கை

இந்த மேம்பாலம் முழுமையாக கட்டிமுடிக்கப்பட்டு 1886-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 8-ம் தேதி திறக்கப்பட்டது. இதையடுத்து கோரிப்பாளையம் - சிம்மக்கல் இடையிலான போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டு வரும் இந்த மேம்பாலம், மதுரை மாநகரத்தின் அடையாளங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. மாவட்ட ஆட்சியர் ஆல்பர்ட் விக்டர் நினைவாக இந்த மேம்பாலம், ஆல்பர்ட் விக்டர் மேம்பாலம் (ஏவி மேம்பாலம்) என அழைக்கப்பட்டு வருகிறது. சுமார் 137 ஆண்டுகளை கடந்து 138-வது ஆண்டில் அடியெடுத்து வைத்து, பயன்பாட்டில் இருந்து வரும் இந்த மேம்பாலத்தை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் மதுரை மக்கள் ஆண்டுக் கணக்கில் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

நூறு ஆண்டுகளை கடந்த கட்டிடங்களை (மக்கள் பயன்பாட்டில் இல்லாத கட்டிடடங்கள்) தமிழக அரசு பாரம்பரிய சின்னமாக அறிவித்து வருகிறது. அதுபோல, ஏவி மேம்பாலத்தையும் பாரம்பரிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என வைகை நதி மக்கள் இயக்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

மேலும், மேம்பாலத்தின் 2,7 மற்றும் 8-ம் எண் தூண்களின் அடித்தளம் சேதமடைந்துள்ளது. இதனையும் சீரமைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நூறாண்டு கடந்தும் மக்களுக்கு பயன்பட்டு வரும் மேம்பாலத்திற்கு உரிய அங்கீகாரம் கிடைக்குமா என்பதே மதுரை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

இதையும் வாசிக்கலாமே...

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

x