மிக்ஜாம் புயல் ஏற்படுத்திய பாதிப்புகள் இன்னும் முழுமையாக சீர் செய்யப்படாத நிலையில், சென்னையில் பல பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடிவடையாமல் இருக்கிறது. இந்நிலையில், இன்றும் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பள்ளிகளை டிசம்பர் 11ம் தேதி திங்கட்கிழமை திறப்பதற்கு ஏதுவாக பள்ளி தலைமையாசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம், தாம்பரம், வண்டலூர், திருப்போரூர், செங்கல்பட்டு, திருக்கழுங்குன்றம் ஆகிய 6 தாலுகாக்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மழையால் பாதிக்கப்பட்டுள்ள காஞ்சிபுரம் மாவட்டத்திலும், ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் என 2 தாலுகாக்களில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டிப் போட்டு கடந்துள்ள நிலையில், மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் முழுமையாக சீராகவில்லை. பல பகுதிகளில் இன்னும் வெள்ளம் புகுந்துள்ள நிலையில், மழைநீர் முழுவதுமாக வடிவடையாத காரணத்தினால் மாணவர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 தினங்களாக மாநகராட்சி ஊழியர்கள் பல பகுதிகளிலும் இரவு, பகல் பார்க்காமல் தொடர்ந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்னும் நிலைமை முழுவதுமாக சீராகாத நிலையில், மாணவர்கள் இந்த விடுமுறை நாளில், அவசியம் இல்லாமல் வெளியே வராமல் வீட்டிற்குள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மிக்ஜாம் புயலால் அதிக பாதிப்புக்குள்ளான சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளின் தலைமையாசிரியர் இன்று பள்ளிக்கு செல்ல பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார். வரும் திங்கட்கிழமை டிசம்பர் 11ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி வளாகத்தை முழுமையாகத் தூய்மை செய்து உடைந்த பொருட்கள், கட்டட இடிபாடுகளை அகற்ற வேண்டும் எனவும், மழையால் வகுப்பறை பாதிக்கப்பட்டிருந்தால் அவற்றைப் பூட்டி மாணவர்கள் செல்லாதவாறு கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ள நீர் தேங்கியிருந்த காரணத்தினாலும், தொடர் மழையால் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி, பள்ளி சுற்றுச்சுவர்களில் இருந்து 20 அடி தொலைவு வரை யாரும் செல்லாத வகையில் படி தடுப்புகள் அமைப்பது அவசியம் என்றும், சுற்றுச்சுவர் அருகே மாணவர்கள் யாரும் செல்லாதபடி கண்காணிக்க வேண்டும் என்றும் தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது.