லடாக்கில் ஹோலி கொண்டாட்டம்... ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் பங்கேற்பு!


ராணூவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் லடாக்கில் ராணுவ வீரர்களுடன் ஹோலிப் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடினார்.

ராஜ்நாத் சிங்குக்கு திலகமிடும் ராணுவ வீரர்கள்

வட மாநிலங்களில் ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு நேற்று முதலே நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. பல்வேறு இடங்களில் பொதுமக்கள் வண்ணப் பொடிகளை தூவி கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இன்று 'ஹோலிகா தஹன்' என்ற நிகழ்ச்சியும் நடத்தப்படுகிறது. இதில் பொது இடங்களில் மக்கள் கூடி ஒருவருக்கொருவர் வண்ணப் பொடிகளை பூசி தங்கள் வாழ்த்துக்களை பரிமாறி கொள்வார்கள். எங்கெங்கும் உற்சாகம் களைகட்டும். எல்லைப் பகுதிகளில் நாட்டின் பாதுகாப்புக்காக பணிபுரியும் ராணுவ வீரர்களும் தங்கள் அதிகாரிகளுடன் ஹோலிப்பண்டியை கொண்டாடி மகிழ்வார்கள்.

இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ வீரர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடினார். உலகின் மிக உயர்ந்த எல்லைப் பாதுகாப்புப் பகுதியான சியாச்சின் மலை உச்சியில் ராணுவ வீரர்களுடன் ஹோலி பண்டிகையை கொண்டாடப் போவதாக அவர் முன்பே அறிவித்திருந்தார்.

ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத்சிங்

ஆனால் நேற்று திட்டமிட்டபடி தனது பயணத்தைத் தொடங்கிய ராஜ்நாத்சிங்கால் அப்போது நிலவிய மோசமான வானிலை காரணமாக அவரால் சியாச்சின் மலை உச்சிக்கு செல்ல இயலவில்லை. அதனால் லடாக்கில் உள்ள ராணுவ தளத்துக்குச் சென்றார். அங்கு ராணுவ வீரர்கள் அவரை உற்சாகத்துடனும், உரிய மரியாதையுடனும் வரவேற்றனர். பின்னர் ஹோலி கொண்டாட்டங்கள் தொடங்கியது. அங்குள்ள ராணுவ வீரர்களின் நெற்றியில் திலகமிட்டு ஹோலிப் பண்டிகையை அவர்களுடன் ராஜ்நாத் சிங் உற்சாகமாக கொண்டாடினார். வீரர்களும் அவருக்கு திலகமிட்டு தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

x