பாஜக வேட்பாளரானார் கங்கனா ரணாவத்... இமாச்சலப் பிரதேசத்தில் போட்டி!


கங்கனா ரணாவத்

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதியில் பிரபல நடிகை கங்கனா ரணாவத் போட்டியிட உள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 5வது கட்ட வேட்பாளர்கள் பட்டியல் நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 111 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அந்த பட்டியலில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட நடிகை கங்கனா ரணாவத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இமாச்சல பிரதேச மாநிலத்தில் மொத்தம் 4 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அதில் உள்ள ஒரு தொகுதியான மண்டியில் போட்டியிட கங்கனா ரணாவத்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014 ம் ஆண்டுக்கு முன்புவரை காங்கிரஸுக்கு சாதகமாக அறியப்பட்ட இந்த தொகுதி 2014க்குப் பிறகு பாஜகவுக்கு சாதகமாக மாறியது. 2014 மற்றும் 2019 தேர்தல்களில் பாஜக வெற்றி பெற்றது. பாஜக உறுப்பினரின் திடீர் மரணமடைந்ததால் அங்கு 2021ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில் காங்கிரஸ் கட்சியின் பிரதீபாசிங் வெற்றி பெற்றார். அதனால் மீண்டும் தொகுதியை காங்கிரஸிடமிருந்து கைப்பற்ற வேண்டும் என்கிற முனைப்பில் பாஜக சார்பில் கங்கனா ரணாவத் களமிறக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கங்கனா ரணாவத், என் அன்புக்குரிய பாரதிய ஜனதா கட்சிக்கு எப்போதும் எனது நிபந்தனையற்ற ஆதரவு உண்டு. பாஜகவின் தேசியத் தலைமை, எனது பிறந்த இடமான இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் என்னை வேட்பாளராக அறிவித்திருக்கிறது. கட்சியில் அதிகாரபூர்வமாக இணைந்ததை பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். நான் ஒரு தகுதியான காரியகர்த்தாவாகவும், நம்பகமான மக்கள் சேவகியாகவும் செயல்பட ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

பிரபல நடிகையான கங்கனா ரணாவத், நான்கு தேசிய விருதுகள், ஐந்து பிலிம்பேர் விருதுகள் பெற்றவர். போர்ப்ஸ் இந்தியாவின் பிரபலமான 100 பேர் பட்டியலில் ஆறு முறை இடம் பெற்றவர். 2020ம் ஆண்டு இவருக்கு மத்திய அரசால் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. அன்மைக் காலமாக பாஜகவுக்கு ஆதரவான தீவிர கருத்துக்களை இவர் பேசி வந்ததால் இவரை தற்போது பாஜக வேட்பாளராக அறிவித்திருக்கிறது.

x