மோடி ஆட்சிதான் காமராஜர் ஆட்சியா? - தமிழிசை கருத்துக்கு செல்வப்பெருந்தகை கண்டனம்


சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்ட அறிக்கை: பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நிர்வாகியான தமிழிசை சௌந்தரராஜன் மோடி ஆட்சி தான் காமராஜர் ஆட்சி என்று பேசியிருக்கிறார். மக்களை மதரீதியாக பிளவுபடுத்துகிற வெறுப்பு அரசியலையும், அதிகாரங்களை குவித்து வைத்துக்கொண்டு சர்வாதிகார பாசிச முறையில் செயல்பட்டு வருகிற பிரதமர் மோடியின் ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிடுவது தமிழிசை சவுந்தரராஜனின் அறியாமையை காட்டுகிறது. காமராஜர் ஆட்சி பற்றி குறைந்தபட்ச புரிதல்கூட இல்லாவிட்டால் காங்கிரஸ் தலைமையில் காமராஜர் ஆட்சி அமைப்போம் என்ற நோக்கத்துடன் கன்னியாகுமரியில் இருந்து சென்னை வரை தம்மை வருத்திக்கொண்டு பாதயாத்திரை மேற்கொண்ட அவரது தந்தை குமரி அனந்தனிடம் கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

காமராஜர் ஆட்சி என்பது மக்கள் நலன் சார்ந்த தமிழக மக்களை வளர்ச்சிப் பாதையில் அழைத்து செல்லுகிற பொற்கால ஆட்சி ஆகும். இன்றைய நவீன தமிழகத்துக்கு சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக அடித்தளமிட்டவர் காமராஜர். அனைத்து துறைகளிலும் அனைத்து மக்களுக்கும் சமநிலைத் தன்மையோடு ஆட்சிமுறையை வழங்கியவர். பொதுவாழ்வில் எளிமை, நேர்மை, தூய்மைக்கு இன்றைக்கும் எடுத்துக்காட்டாகவும், முன்மாதிரியாகவும் திகழ்பவர். ஆடம்பர அரசியலை மேற்கொண்டு வருகிற மோடி ஆட்சியை காமராஜர் ஆட்சியோடு ஒப்பிட்டுப் பேசுவது காமராஜருக்கு இழைக்கப்படுகிற மிகப்பெரிய துரோகமாகும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

x