வரி விகிதத்தை முறைப்படுத்த ஜிஎஸ்டி கவுன்சில் ஆய்வு: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்


சென்னை: பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி விகிதத்தை முறைப்படுத்துவது குறித்து ஜிஎஸ்டி கவுன்சில் ஆராய்ந்து வருவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்தார்.

சென்னையில் உள்ள ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் கலந்துரையாடினார். அப்போது, அவர் கூறியதாவது:

வரி விகித சீரமைப்புக்கான அமைச்சர்கள் கமிட்டி, பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை முறைப்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறது. மேலும், இந்த செயல்முறை நீண்டகாலமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. எனினும், கரோனா தாக்கம், சில மாநிலங்களில் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் தாமதம் ஆகி வருகிறது. எனினும், தற்போது இதை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துள்ளது.

சட்டப்படி 2022 ஜூன் 30-க்குப் பிறகு ஜிஎஸ்டி இழப்பீடு தொடர முடியாது என்பது அனைவருக்கும் தெரியும். எனவே, ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு பிறகு முதல் 5 ஆண்டுகளில் இழப்பீடு செலுத்துவது தொடர்ந்தது. அது ஜூன் 2022-ல் முடிவடைந்தது. எனினும், செஸ் வரி தொடர்ந்து வசூலிக்கப்படுகிறது. இது தொடர வேண்டுமா, வேண்டாமா, எந்தெந்த பொருட்களுக்கு செஸ் வரி விதிக்க வேண்டும் என்பது குறித்து ஜிஎஸ்டி கவுன்சிலில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஜிஎஸ்டி வரி அமல்படுத்துவதற்கு முன்பாக மாநில அரசுகளுக்கு கிடைத்த வரி வருவாயை விட ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்ட பிறகு அதிக வருவாய் கிடைத்து வருகிறது. ஜிஎஸ்டி வரி விகிதப்படி, மாநிலங்களில் 14 சதவீதத்துக்கும் மேல் வளர்ச்சி இருக்க வேண்டும். உதாரணமாக, கடந்த 2017-ம் ஆண்டுக்கு முன்பு தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 6.5 சதவீதமாக இருந்தது. அதன்படி, தமிழக அரசு ரூ.4.23 லட்சம் கோடிதான் வரி வருவாய் ஈட்டி இருக்கும். ஆனால், ஜிஎஸ்டி வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டதன் மூலம் கூடுதலாக ரூ.5.23 லட்சம் கோடி வரி இழப்பீடு வழங்கப்பட்டது.

மத்திய அரசுக்கு செஸ் வரியை வசூலிக்க அரசியல் சாசனப்படி அதிகாரம் உள்ளது. அதை மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்பது கட்டாயம் கிடையாது. இந்த செஸ் வரி, சாலைகள், பள்ளிகள், துறைமுகங்கள் மற்றும் மருத்துவமனைகள் அமைக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

முன்னதாக, தென்சென்னை மக்களவை தொகுதிக்கு உட்பட்ட கொட்டிவாக்கம் கடற்கரை மீனவர் குடியிருப்பு பகுதியில் நேற்று நடந்த பாஜக உறுப்பினர் சேர்க்கை முகாமில் நிர்மலா சீதாராமன் பங்கேற்று, கட்சியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

அப்போது அவர் பேசும்போது, தெருவோரம், தள்ளு வண்டிகளில் மீன் விற்பனை செய்யும் மீனவ பெண்கள், வியாபாரத்தை மேம்படுத்திக் கொள்ள பி.எம்.ஸ்வநிதி திட்டத்தின் கீழ் கடன் உதவி வழங்கப்படும். இதற்காக, எந்த உத்தரவாதமும் கேட்கப்படாது. மத்திய அரசு திட்டங்களின்கீழ் விவசாயிகள், மீனவர்களுக்காக முத்ரா கடன் வழங்க வங்கிகள் மறுத்தால் அதுகுறித்து புகார் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் பேசினார்

x