கோவை: தமிழ்நாட்டில் பயங்கரவாதிகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. காவல்துறை மற்றும் உளவுப்பிரிவு அதிகாரிகள் உரிய முறையில் கண்காணிக்க வேண்டும். என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்தார்.
கோவை ராமநாதபுரம் பகுதியில் மறைந்த இந்து முன்னணி நிர்வாகி சசிகுமார் நினைவஞ்சலி நிகழ்ச்சி இன்று (செப்.22) மாலை நடந்தது. கோவை மாநகர் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட இந்து முன்னணி கொடிக்கம்பங்களின்கீழ் சசிகுமார் திருவுருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. ராமநாதபுரம் 80 அடி சாலையில் உள்ள விநாயகர் கோயில் முன் நினைவஞ்சலி பொதுக்கூட்டம் நடந்தது. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் தலைமை வகித்து பேசினார். மாவட்டத் தலைவர் கே. தசரதன் முன்னிலை வகித்தார்.
தொடர்ந்து இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “மறைந்த சசிக்குமார் இந்து சமுதாயத்துக்காக முழு நேரம் உழைத்தவர். திட்டமிட்டு படுகோலை செய்யப்பட்டார். தமிழகத்தில் இந்து முன்னணி வளர கூடாது என்பதற்காக ராம கோபாலன் பயங்கரவாதிகளால் வெட்டப்பட்டார்.
மாநில தலைவர் ராஜகோபால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுபோன்று நிர்வாகிகள் பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். கோவையில் ரகசிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது என தொடர்ந்து கூறி வரும் நிலையில் உளவுத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை. தீவிரவாதிகள் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஊடுறுவி உள்ளனர். அவர்களை கண்டறிய தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழ்நாட்டில் போதை பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனால் கொலை, கொள்ளை சம்பவங்கள் தொடர்கின்றன. காவல்துறை மற்றும் உளவுப்பிரிவு அதிகாரிகள் உரிய முறையில் கண்காணிக்க வேண்டும்.
ஆந்திராவில் முன்பு ஆட்சியில் இருந்தவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர். திருப்பதி கோயில் லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்பட்ட நெய் தரம் குறித்து வெளியான தகவல் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் சனிக்கிழமை தமிழகம் முழுவதும் ஆஞ்சநேயர் கோயிலில் தேங்காய் உடைத்து கடவுளிடம் முறையிடும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.