கோவை: கோவை மாவட்டம் ஆலந்துறை அருகே சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவது தொடர்பான புகாரை தொடர்ந்து சம்பவ இடத்தில் ஆட்சியர் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
கோவை மாவட்டம் பேரூர் வட்டம் ஆலந்துறை, காளிமங்கலம், தேவராயபுரம், வால்கரடு மற்றும் மதுக்கரை வட்டம் கரடிமடை ஆகிய பகுதிகளில் சட்ட விரோதமாக மண் அள்ளப்பட்டு செங்கல் உற்பத்தி நடைபெறுவதாக தொடர் புகார்கள் எழுந்தன.
சமூக ஆர்வலர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், மணல் கடத்தல் சம்பவங்களை தடுத்து நிறுத்தவும் அச்செயல்களில் ஈடுபடுவோரை கைது செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
புகார் தெரிவிக்கப்பட்ட இடங்களில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், மண் கடத்தலில் ஈடுபட்ட வாகனங்களை பறிமுதல் செய்யவும், உரிய அனுமதியின்றி கைகளால் செங்கல் தயாரிப்பதை தடுக்க சூளைகளுக்கு சீல் வைக்கவும் வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.