தமிழகத்தில் ரூ.100 கோடியில் சந்தன மர தோட்டங்களை உருவாக்கும் திட்டம் - அச்சம் ஏன்?


கோவை: தமிழகத்தில் காப்புக்காடுகளில் ரூ.100 கோடி மதிப்பில் செயல்படுத்தப்பட்டு வரும் சந்தன மர தோட்டங்களை உருவாக்கும் திட்டத்தை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் ஜவ்வாது மலை, சேர்வராயன் மலை, கொல்லிமலை, பச்சை மலை, சித்தேரி மலை ஆகிய பகுதிகள், பாரம்பரியமாக சந்தன மரங்கள் வளரும் பகுதிகளாக உள்ளன.

உலகெங்கும் சந்தன கட்டைகள் மற்றும் சந்தன எண்ணெய்க்கு நல்ல விலை இருப்பதால், வனப்பகுதிகளில் வளர்ந்திருந்த லட்சக்கணக்கான சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டன. இதனால் தமிழகத்தில் சந்தன மரங்களின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டது. இதனால் சந்தன மரங்களை அதிக எண்ணிக்கையில் வளர்க்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

அந்த வகையில், 2015-16 முதல் 2024-25 வரையிலான 10 ஆண்டு காலத்துக்கு காப்புக்காடுகளில் சந்தன மரத் தோட்டங்களை ஏற்படுத்தும் திட்டம் ரூ.100 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2021-22ம் ஆண்டு வரை இத்திட்டத்தின் கீழ் ரூ.8.94 கோடி செலவில் 7.10 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என வனத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து, இயற்கை ஆர்வலர்கள் கூறும்போது, “தமிழகத்தில் உள்ள சேலம், நாமக்கல் உள்ளிட்ட வனப்பகுதிகளில் சந்தன மரம் நன்றாக வளரும் தட்பவெப்ப நிலை உள்ளது. சந்தன மரக்கன்றுகளை நடுவதுடன் கண்காணிப்பு செய்ய வேண்டும்.

சந்தன மர தோட்டங்கள் ஏற்படுத்தும் திட்டத்தை முழுமையாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அப்போது தான் சந்தன மரங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து தெரியவரும்” என்றனர்.

சட்ட திருத்தம் வேண்டும்: சந்தன மரத்தை பட்டா நிலத்தில் விளைவிப்பதில் உள்ள சிரமங்கள் குறித்து, கோவை மாவட்ட மூலிகை மற்றும் மரம் வளர்ப்போர் சங்கத்தின் செயலாளர் நாராயணசாமி கூறும்போது, “விவசாயிகள் பட்டா நிலத்தில் வளர்த்தாலும் சந்தன மரம் அரசின் சொத்தாகும். சந்தன மரம் விவசாயிகளின் விளைபொருள் என்ற அடிப்படை சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும்.

அப்போது தான் சந்தன மர விவசாயம் செய்யும் விவசாயிகள் பயன்பெறுவர். ஏற்கெனவே மத்திய அரசு 2019-ல் சந்தன மரம் வளர்ப்பு தொடர்பான சட்ட திருத்தத்தை அந்தந்த மாநில அரசுகள் மேற்கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. இவ்விஷயத்தில் தமிழக அரசு கவனம் செலுத்தி சந்தன மரம் வளர்ப்பு குறித்த சட்ட திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா: வனத்துறை அதிகாரிகள் கூறும்போது, “தமிழகத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட தரமான சந்தன மர விதையில் இருந்து புதிய சந்தன செடியை ஆஸ்திரேலியா உருவாக்கி உள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள பாலைவன பகுதிகளில் சந்தன மர செடிகள் அதிகளவில் வளர்க்கப்பட்டு வருகின்றன.

சந்தன மரக் கட்டைகள், எண்ணெய் சந்தையில் ஆஸ்திரேலியா முக்கிய இடம் பிடித்துள்ளது. உலகளவில் தேவை அதிகரித்து வரும் நிலையில், வரும் 2040-ல் இந்தியா சந்தன கட்டைகள், சந்தன எண்ணெய் ஆகியவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் சூழல் உள்ளது” என்றனர்.

x