கொடைக்கானல்: கொடைக்கானலில் வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததால் சுற்றுலாத்தலங்களில் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம். இந்த வாரம் கேரளா, கர்நாடகா, ஆந்திரா என வெளிமாநில சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டதால் சுற்றுலாத்தலங்கள் நிரம்பி காணப்பட்டன.
தரைப்பகுதியில் கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகரித்து காணப்படுகிறது. ஆனால் கொடைக்கானலில் பகலில் அதிகபட்சமாக 20 டிகிரி செல்சியஸும், இரவில் குறைந்தபட்சமாக 14 டிகிரி செல்சியஸும் வெப்பநிலை நிலவியது.
ரம்மியமான தட்பவெப்ப நிலையில் இயற்கை எழிலை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
கொடைக்கானல் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரையண்ட் பூங்காவில் பூக்களுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். நட்சத்திர வடிவிலான ஏரியில் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.
இந்த வாரம் வெளிமாநில சுற்றுலா பயணிகளால் கொடைக்கானல் சுற்றுலாத்தலங்களில் கூட்டம் அதிகம் காணப்பட்ட நிலையில், அடுத்த வாரம் காலாண்டு தேர்வு விடுமுறை என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.