‘சிங்கத்தின் கோட்டைக்குள் வந்து ஆடு சிக்கியுள்ளது’ - அண்ணாமலையை விமர்சிக்கும் கோவை அதிமுக!


அதிமுக அமைப்புச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி

கரூரைச் சேர்ந்த அண்ணாமலை கோவையில் போட்டியிடுவது ஏன் என அதிமுக அமைப்புச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். இவர்கள் அறிவிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுகவின் வேட்பாளர் அறிமுக கூட்டம் பல்வேறு இடங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

சின்னியம்பாளையத்தில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுக அமைப்புச் செயலாளர் எஸ்.பி.வேலுமணி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் உட்பட பலரும் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், “அண்ணாமலை மட்டுமல்ல எந்த இமயமலை வந்தாலும் திருவண்ணாமலை அருளால் ராமச்சந்திரன் மாபெரும் வெற்றியை பெறுவார்”என தெரிவித்தார். பின்னர் பேசிய அதிமுக செய்தி தொடர்பாளர் கல்யாணசுந்தரம், “கோவை என்பது எஸ்.பி.வேலுமணி என்ற மாபெரும் சிங்கத்தின் கோட்டை. இந்த சிங்கத்தின் கோட்டைக்குள் வந்து ஆடு சிக்கி உள்ளது” என்று விமர்சித்தார்.

அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம்

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய எஸ்.பி.வேலுமணி, ”எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக பதவி ஏற்ற பின்னர் நடக்கும் முதல் தேர்தலில் வெற்றி பெறுவோம். அதிமுகவை அழிக்க நினைத்தாலும் யாராலும் அழிக்க முடியவில்லை. அதிமுக வலுவான கட்சி. அதிமுக வெற்றி பெறுவது உறுதி. திமுகவில் வேட்பாளராக யாருக்கும் தகுதி இல்லை. திமுக அதிமுக இடையே தான் போட்டியே. ஆனால் திமுக வேட்பாளர் இன்று டம்மியாக உள்ளார். கரூரில் நிற்காமல் அண்ணாமலை கோவையில் நிற்கிறார். பாஜகவிற்கு 4 சதவீத ஓட்டுகள் மட்டுமே உள்ளது. கூட்டணியில் உள்ள பாமக, தமாகா கட்சிகளுக்கு ஓட்டு உள்ளதா? சிறப்பாக வேலை செய்தாலும் அவர்களால் 10 சதவீத ஓட்டு வாங்கி வெற்றி பெற முடியுமா? நிறைய கட்சிகள் நம்மிடம் பேசிக்கொண்டே துரோகம் செய்துவிட்டு சென்று விட்டார்கள். அவர்களுக்கு நாம் யார் என காட்ட வேண்டும்” என்று பேசினார்.

பின்னர் பேசிய அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், ”அண்ணாமலை கரூரில் நின்றால் டெபாசிட் கிடைக்காது என்பதால் கோவையில் நிற்கிறார். ஒரு கரூர்காரர் (செந்தில்பாலாஜி) ஜெயிலில் இருக்கிறார். அவர் வெளியே வர இன்னொரு கரூர்காரரை ஜெயிக்க வைக்க திமுகவினர் டம்மி வேட்பாளரை நிறுத்தி உள்ளார்கள், என வாட்ஸ் அப்பில் வந்தது. அது உண்மையா என தெரியவில்லை. நாடாளுமன்றத்தில் தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு என எந்த மொழியிலும் பேசத் தயார். அண்ணாமலைக்கு சவால் விடுகிறேன். என்னுடன் கோவையின் வளர்ச்சி குறித்து பேச தயாரா? என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

x