பணிக்காலத்தின்போது உயிரிழந்தால் அரசு ஊழியர்களுக்கு இணையாக போக்குவரத்து ஊழியர்களுக்கும் இழப்பீடு வழங்கக் கோரிக்கை


சென்னை: பணிக்காலத்தின்போது உயிரிழப்பு நேரும் பட்சத்தில் அரசு ஊழியர்களுக்கு இணையாக போக்குவரத்து ஊழியர்களுக்கும் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் டி.வி.பத்மநாபன் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: ''சென்னையில் நடைபெற்ற கார் பந்தயத்தின்போது, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த உதவி ஆணையர் சிவகுமார், தஞ்சாவூர் இரட்டை வயல் கிராமம் அருகே சாலை விபத்தில் உயிரிழந்த ஆயுதப்படை காவலர் சுப்ரியா ஆகியோர் மறைவையொட்டி குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அளித்ததை பாராட்டுகிறோம்.

அதே நேரம், போக்குவரத்து தொழிலாளியின் உயிருக்கு தமிழக அரசு நிர்ணயம் செய்த விலை பேரதிர்ச்சியாகவும், பேரிடியாகவும் உள்ளது. நீலகிரியில் இருந்து கோத்தகிரிக்கு பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பிரதாப், மழை காரணமாக மின்கம்பி அறுந்து சாலையில் விழுந்திருப்பதை அறிந்து பேருந்தை நிறுத்தி, பின்படிக்கட்டு வழியாக பயணிகளை பத்திரமாக இறக்கினார். இறுதியாக ஓட்டுநர் கதவு வழியாக அவர் இறங்கும்போது, பேருந்து மீது மின்கம்பி பட்டதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

அவருடைய குடும்பத்தினருக்கு முதல்வர் நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துக் கழக ஊழியர்களின் உயிர், அரசு ஊழியரின் உயிரை விட மதிப்பற்றதா. ரூ.25 லட்சத்துக்கும் ரூ.3 லட்சத்துக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி உள்ளது. எனவே, மறுபரிசீலனை செய்து ஓட்டுநர் பிரதாப் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்க வேண்டும்.'' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

x