கடந்த நவ.15ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி சிகிச்சை முடிந்து இன்று காலை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, மீண்டும் புழல் சிறைக்கு திரும்பியுள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், கடந்த ஜூன் 14ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகளால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அவ்வப்போது செந்தில் பாலாஜி உடல்நிலை பாதிப்புள்ளாகி வருகிறது. இந்த நிலையில், கடந்த நவம்பர் 15ம் தேதி, புழல் சிறையில் இருந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முதல்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முழு உடல் பரிசோதனை மேற்கொண்ட சிறப்பு மருத்துவக் குழு, மூளையில் கட்டி இருப்பதாக கூறியது. அதற்கு தேவையான சிகிச்சைகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில், சிகிச்சை முடிந்து அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல் நலம் சற்று தேறிய நிலையில் இன்று (டிச.07) காலை 6.30 மணிக்கு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.