விழுப்புரம்: உதவித்தொகை கேட்டு காத்திருக்கும் 1,204 மாற்றுத் திறனாளிகள்


தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக, அறிவுசார் குறைபாடுடையோர், கை, கால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்கள், தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தொழு நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், தண்டுவட நோய் உள்ளிட்ட பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு ஆளானவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேற்கண்ட சிக்கல்களில், 75 சதவீதத்துக்கு மேல் பாதிப்பு உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு பராமரிப்பு உதவித் தொகையாக மாதம் ரூ. 2 ஆயிரம் தரப்படுகிறது. இது, அவா்களின் வங்கிக் கணக்கு எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதன் மூலம் 2,15,505 பேர் பயனடைகிறார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் கடந்த 19ம் தேதி தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசும்போது, “தமிழகத்தில் மாற்றுத்திறனாளிக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும் திட்டத்துக்காக புதிதாக ஒரு லட்சம் பேர்விண்ணப்பித்த நிலையில், அவர்களுக்கு இத்தொகை வழங்கப்படவில்லை. இதை வழங்காமல் தாமதிப்பது நியாயமல்ல. மகளிர் உரிமைத்தொகையை வழங்குவதற்காக இத்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன” என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பரவலாக குற்றச்சாட்டு கூறப்படும் நிலையில், விழுப்புரம் மாவட்டத்தின் நிலை குறித்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக வட்டாரங்களில் கேட்டபோது கிடைத்த விவரங்கள் பின்வருமாறு: கடந்த 2022ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் தற்போது வரை, மன வளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வேண்டி 609 பேர், கை, கால் கடுமையாக பாதிக்கப்பட்டோருக்காக பராமரிப்பு உதவித்தொகை வேண்டி 563 பேர், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை வேண்டி 32 நபர்கள் என 1,204 பேர் விண்ணப்பித்து உதவித்தொகை கிடைக்காமல் காத்துள்ளனர் என்று தெரிவிக்கின்றனர்.

x