டாக்டர் ராமதாஸூக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்...சிம்பு பட தயாரிப்பாளர் திடீர் கோரிக்கை!


விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்

மது, சிகரெட் ஒழிப்பைத் தொடர்ந்து வலியுறுத்தி வரக்கூடிய டாக்டர் ராமதாஸூக்கு பாரத ரத்னா கொடுத்து சிறப்பிக்க வேண்டும் என திரைப்பட தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்

விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற தனியார் கல்லூரி ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கலந்து கொண்டார். இதில் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனர், திரைப்படத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷூம் கலந்து கொண்டார். இவர் நடிகர் சிம்புவின் ‘வெந்து தணிந்தது காடு’ உள்ளிட்டப் பல படங்களைத் தயாரித்துள்ளார்.

இந்த விழாவில் அவர் பேசியபோது டாக்டர் ராமதாஸூக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், அவர் பேசுகையில், “எனக்கு அப்பா இல்லை. ராமதாஸ் அய்யா தான் எனக்கு அப்பா. அவர் என்ன சொன்னாலும் செய்ய காத்திருக்கிறேன். மதுப்பழக்கம் இருக்கக் கூடாது என போராடி அதை பின்பற்றியும் சாதனை படைத்திருக்கிறார். சகோதரர் அன்புமணியும் அவர் வழியில் இருக்கிறார்.

எனக்கு 57 வயதாகிறது. இது வரை மதுபழக்கமோ, புகைப்பழக்கமோ எதுவும் இல்லை. அய்யா வழியில் நானும் பயணப்பட்டு இருக்கிறேன். அவர் உலகுக்கே வழிகாட்டி. நாடு இதைப் புரிந்து கொண்டு அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். இந்திய அரசு வழங்கி உரிய மரியாதை செய்ய வேண்டும். இந்த வருடமோ அல்லது அடுத்த வருடமோ அவருக்கு பாரத ரத்னா விருது வரவேண்டும் என்பது என் ஆசை. ஏனெனில், அவரைத் தவிர வேறு யாரும் அதற்கு தகுதி இல்லை” எனக் கூறினார்.

அன்புமணி ராமதாஸ்

மேலும், “அன்புமணி ராமதாஸ் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது 108 ஆம்புலன்ஸ் சேவை, போலியோவை ஒழித்தது என பல நல்ல விஷயங்களை செய்திருக்கிறார். ராமதாஸ் கல்வி அறக்கட்டளை சார்பாக அய்யா தேர்ந்தெடுத்து அனுப்பும் நல்ல மாணவர்களுக்கு எங்கள் கல்லூரியில் இலவச கல்வி தர தயாராக இருக்கிறோம்” எனக் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

x