களத்தில் இறங்குகிறார் எஸ்.பி.வேலுமணி... செம குஷியில் கோவை, நீலகிரி அதிமுக வேட்பாளர்கள்!


அதிமுக தலைமை அலுவலகம்

மக்களவைத் தேர்தலில் தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்க தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமனம் செய்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதில், கோவை, நீலகிரி தொகுதிகளுக்கான பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நியமிக்கப்பட்டிருப்பதால் அதிமுக வேட்பாளர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 19 -ம் தேதி நடக்கிறது. இதையடுத்து பெருவாரியான கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து அடுத்தகட்ட தேர்தல் பணிகளில் இறங்கிவிட்டன. திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்காக முதல்வர் ஸ்டாலின் நேற்று முதல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிமுக சார்பில் நாளை வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் திருச்சியில் நடைபெற உள்ளது.

அதற்கு முன்பாக, தேர்தல் பணிகளை ஒருங்கிணைத்து பணிகளை கவனிக்க 40 தொகுதிகளுக்கும் தொகுதி வாரியாக பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

எடப்பாடி பழனிசாமி

அதன்படி கோவை, நீலகிரிக்கு எஸ்.பி.வேலுமணியும், ஈரோடு, திருப்பூருக்கு செங்கோட்டையனும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

தென் சென்னைக்கு கோகுல இந்திரா, மத்திய சென்னைக்கு தமிழ் மகன் உசேன், விழுப்புரம் தொகுதிக்கு சி.வி.சண்முகம் ஆகியோர் பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேனி மற்றும் ராமநாதபுரத்திற்கு முன்னாள் அமைச்சர் உதயகுமார் பணிக்குழு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல மற்ற தொகுதிகளுக்கும் கட்சி முன்னணி நிர்வாகிகளை பணிக்குழு பொறுப்பாளர்களாக எடப்பாடி பழனிசாமி நியமித்துள்ளார்.

கொங்கு மண்டலம் அதிலும் குறிப்பாக கோவை மண்டலம் தொடர்ந்து அதிமுக கோட்டையாகவே இருந்து வருகிறது. அந்தளவுக்கு கோவை அதிமுக செல்வாக்குடன் இருக்கக் காரணமே முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தான். என்றபோதும் இம்முறை பாஜக தனித்து நிற்பதால் இம்முறை அதிமுகவின் செல்வாக்கு சரியக்கூடுமோ என்ற கவலை அதிமுகவினருக்கு இருக்கிறது. போதாக்குறைக்கு, கோவையில் அண்ணாமலையும், நீலகிரியில் எல்.முருகனும் பாஜக வேட்பாளர்களாக களத்தில் நிற்பதும் அதிமுகவினரை கலக்கமடையச் செய்திருக்கிறது.

இந்த நிலையில், கோவை, நீலகிரி தொகுதிகளுக்கான தேர்தல் பொறுப்பாளராக எஸ்.பி.வேலுமணி நியமிக்கப்பட்டிருப்பதால் இந்தத் தொகுதிகளின் அதிமுக வேட்பாளர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இதையும் வாசிக்கலாமே...

தஞ்சையில் வீதி, வீதியாக நடந்து சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்குசேகரிப்பு... ஆர்வமுடன் செல்ஃபி எடுத்த பொதுமக்கள்!

ராமேஸ்வரத்தில் மீனவர்களின் காலவரையற்ற போராட்டம் தொடங்கியது!

x