சென்னை: அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 116-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை நொளம்பூரில் நேற்று நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமி பங்கேற்று, ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரம், சைக்கிள், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட நலதிட்ட உதவிகளை வழங்கினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் திமுக ஆட்சியில் மக்களுக்கும், பெண்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் இருந்து வந்த நிலையில், காவல்துறைக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை. அதிமுக ஆட்சியில் அதிக எண்ணிக்கையில் கலை, அறிவியல் கல்லூரிகளை கொடுத்தோம். ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லூரிகளை கொண்டு வந்தோம்.
இதன் விளைவாக இந்திய அளவில் உயர் கல்வி படித்தவர் எண்ணிக்கையில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. அதிமுகவில் பழனிசாமிக்கு 6 பேர் எதிர்ப்பு, 12 பேர் எதிர்ப்பு என செய்திகள்வருகிறது. ஆனால், ஒருவர்கூட எதிர்ப்பு இல்லை. எங்கள் கட்சி கட்டுக்கோப்போடு இருக்கிறது. அதிமுக இணையும் என்றும் செய்திகள் வெளியிடப்படுகிறது. அதிமுக பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுப்படி 4 பேர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது, நீக்கப்பட்டதுதான். இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை.
அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் அடியோடு அழிந்து போயிருக்கிறார்கள். தொண்டர்கள் தான் அதிமுக. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு தான் இறுதியானது. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமையும். திமுக கூட்டணியில் புகைய ஆரம்பித்து விட்டது விரைவில் நெருப்பு பிடித்துக்கொள்ளும். கூட்டணி இல்லை என்றால் திமுக படுதோல்வியைச் சந்திக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கள் பா.பென்ஜமின், பி.வி.ரமணா, மாதவரம் மூர்த்தி. எஸ்.அப்துல் ரஹீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.