சென்னை: ஒரு தமிழன் பிரதமராக நாட்டை தயார்படுத்த வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார். சென்னை, தேனாம்பேட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-வது பொதுக்குழு கூட்டம் கட்சித்தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வில், கமல்ஹாசன் பேசியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல்என்பதெல்லாம் எவ்வளவு ஆபத்தான பேச்சு. இந்தியாவுக்குஅது தேவையில்லை, தேவைப்படாது. கடந்த2014-ல் நாடு முழுவதும் ஒரே தேர்தல் நடத்தியிருந்தால் இன்றைக்கு இந்தியாவின் கதி என்ன. ஒட்டுமொத்தமாக அனைத்து தொகுதிகளையும் கீரைகட்டுபோல் கையில் எடுத்திருப்பார்கள்.
அடுத்த 5 ஆண்டில் இதைச் செய்தால் தான் நமக்கு வழிவிடுவார்கள் என்ற பயம் ஆட்சியாளருக்கு வேண்டும். எப்படி ஜனநாயகத்தை புரட்டி போடுவது என குழம்பிக் கொண்டிருக்கின்றனர்.
மக்கள் தொகையை கட்டுப்படுத்த அறிவுறுத்தினர். அதை பின்பற்றியதற்காக நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தை குறைக்க பார்க்கின்றனர். நாட்டை நடத்திக் கொண்டிருப்பது நாம் கொடுக்கும் பணம். சகோதர மாநிலங்களை பட்டினி போடச் சொல்லவில்லை. பகிர்ந்து உண்போம் என்கிறேன். ராஜகோபால் என்னும் தெலுங்கு பேசுபவர் இங்கு முதல்வராக இருந்தார். ஆனால் ஒரு தமிழன் பிரதமராக முடியுமா, அதற்கு நாட்டை தயார்படுத்த வேண்டும். கோவையில் நடந்தது தோல்வி என்றால் அவர்கள் வென்று ஆட்சிக்கு வந்தது வெற்றியல்ல.
ஒரு பூத்துக்கு குறைந்தது 5 பேர் நியமிக்கப்பட வேண்டும் என 7 ஆண்டுகள் கழித்து கெஞ்சும்படி வைத்துவிட்டீர்களே. நம் தலைவர் அவ்வளவு பெரியவர் என கூட்டம் போட்டு சொல்ல வேண்டாம். கூட்டம் எவ்வளவு பெரியது என காட்ட வேண்டும். நான் எவ்வளவு பெரியவன் என காட்டவேண்டிய இடத்தில் காட்டுகிறேன். நாளை அரசியல் நம்மை பார்த்து பேசப் போகிறது. இன்றைய அரசியல்வாதிகள் குறிப்பாக முதல்வர், நாம் எவ்வித எதிர்பார்ப்புமின்றி நன்றாக தேர்தல் பணி செய்ததாக கூறினார்.
2026 தேர்தலை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறோம். அதற்கான ஏற்பாடுகளை செய்தே ஆக வேண்டும். மறுபடியும் சினிமாவுக்கு சென்றுவிட்டதாக விமர்சிக்கின்றனர். பின்னர் கோட்டை கஜானாவில் இருந்தா பணம் எடுக்க முடியும். முழுநேர அரசியல்வாதி யாருமே இல்லை. கிடைக்கும் நேரத்தில் சரியாக வேலை செய்தால் போதுமானது. இன்றைக்கு எனக்கு என்ன என கேட்காதீர்கள். வேலை செய்யுங்கள், நாளை நமதாகும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: கட்சித் தலைவராக மீண்டும் கமல்ஹாசன் தேர்வு செய்யப்படுகிறார். சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக குறைந்தது 5 ஆயிரம் உறுப்பினர்களை சேர்க்கும் வகையில் ஜூன் 25-ம் தேதிக்குள் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்த வேண்டும். அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் பூத்துக்கு தலா 5 பேரை நியமிக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பாக குழு அமைத்து, பரிந்துரைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு மக்கள் நீதி மய்யம் வழங்கும். போதைப்பொருளுக்கு எதிரான தமிழக அரசின் நடவடிக்கைக்கு பாராட்டுகள். மத்திய அரசு சாதிவாரிகணக்கெடுப்பை நடத்த வேண்டும். தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு வன்மையான கண்டனம். தேர்தலில் போட்டியிடுவதற்கான வயதுவரம்பை 21-ஆக குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம், துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, ஆர்.தங்கவேலு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் 1400 பேர் பங்கேற்றனர்.