நாள் நல்ல நாள்... அதிமுக வேட்பாளர்களுக்கு எடப்பாடி பழனிசாமி போட்ட திடீர் உத்தரவு!


அதிமுக தேர்தல் அறிக்கை வெளியிடும் தலைவர்கள்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் 25-ம் தேதியன்று ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ம் தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது. அதை எடுத்து அனைத்து அரசியல் கட்சிகளின் சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவருமே நல்ல நாள் பார்த்து அன்றைய தினம் தங்கள் ஆதரவாளர்களுடன் சென்று வேட்பு மனு தாக்கல் செய்வது வழக்கம்.

அந்த வகையில் திமுக வேட்பாளர்கள் பலரும் 25-ம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளனர். ஆனாலும், பெரம்பலூர் தொகுதி வேட்பாளர் அருண் நேரு நேற்றே தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இதில் சில வேட்பாளர்கள் 27- ம் தேதி அன்று மனு தாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளனர்.

ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர்

இதே போல் அதிமுக கூட்டணி வேட்பாளர்களைப் பொறுத்தவரை 40 தொகுதி வேட்பாளர்களும் நாளை (மார்ச் 24) திருச்சியில் நடைபெறும் தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர். அதன் பிறகு 25- ம் தேதி அதிமுக வேட்பாளர்கள் அனைவரும் ஓரேநாளில் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளதாக தெரிகிறது.

அன்றைய தினம் மனுதாக்கல் செய்ய முடியாதவர்கள் 27-ம் தேதி மனுதாக்கல் செய்யலாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர். இதேபோல் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும் 25-ம் தேதியே வேட்பு மனு தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார்.

இதேபோல் மற்ற கட்சி வேட்பாளர்களும் 25 மற்றும் 27 ஆகிய இரு நாட்கள் நல்ல நாள் என்பதால் அன்றைய நாட்களில் மனுதாக்கல் செய்ய முடிவெடுத்துள்ளனர். அந்த நாட்களில் அதிக மனுக்கள் தாக்கல் செய்யப்படும் என்பதால் ஆட்சியர் அலுவலகங்களில் கூடுதல் பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த தேர்தல் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

x