மதுரை மாநகராட்சியில் ஏழை, எளிய மக்கள் சாப்பிடும் அம்மா உணவகங்கள் சமைப்பதற்கு அரிசி, மளிகைப்பொருட்கள், காய்கறிகள் இல்லாமல் அடிக்கடி மூடப்படுகின்றன.இதனால் பசியோடு வரும் அடித்தட்டு மக்கள், தொழிலாளர்கள் சாப்பிட முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர்.
கடந்த அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா தொடங்கிய அம்மா உணவகம், அடித்தட்டு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. மதுரை மாநகராட்சியில் அரசு மருத்துவமனை, ஆணையூர், காந்திபுரம், புதூர், ஆர்.ஆர்.மண்டபம், மேலவாசல், பழங்காநத்தம், ஆரப்பாளையம், சிஎம்ஆர் ரோடு, சுந்தர்ராஜா புரம், திருப்பரங்குன்றம் உள்பட 12 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்படுகின்றன. இந்த உணவகங்களில் இட்லி ரூ.1, சாம்பார் சாதம் ரூ.5 தயிர் சாதம் ரூ.3 போன்றவை மலிவு விலையில் வழங்கப்படுகிறது. வாரத்தில் 7 நாட்களும் உணவுகள் வழங்கப்படுகிறது.
ஆரம்ப காலத்தில் அம்மா உணவகங்கள் மாநகராட்சி மைய அலுவலகத்தின் வருவாய்துறை உதவி ஆணையர் நேரடி கட்டுப்பாட்டில் செயல்பட்டன. அதனால், அம்மா உணவகத்திற்கு தேவையான நிதி, ஊழியர்கள் ஊதியம் போன்றவை உடனுக்குடன் அனுமதிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டன. சாப்படுகளும் கூடுதலாக சமைத்து வழங்கப்பட்டன. அதன்பின், மண்டல உதவி ஆணையாளர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் வசம் இந்த அம்மா உணவகங்கள் நிர்வாக பொறுப்பு ஒப்படைக்கப்பட்டன.
அம்மா உணவகங்களில் மகளிர் சுய உதவிக்குழுவினர், உணவுகளை சமைத்து வழங்கி வருகின்றனர். மண்டல அலுவலகங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டப்பின் அம்மா உணவகங்கள் செயல்பாடுகள் மங்க ஆரம்பித்தன. அம்மா உணவகத்திற்கு தேவையான நிதியை மைய அலுவலகத்தில் பெற்று மளிகைப்பொருட்கள், அரிசி, கியாஸ் சிலிண்டர் போன்றவை உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படுவதில்லை.
அம்மா உணவகங்கள் பெரும்பாலும் அரசு மருத்துவமனைகள், பஸ்நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் வந்து செல்லும் இடங்களில் தொடங்கப்பட்டன. ஏழை, எளிய, மக்கள் மிக குறைந்த விலையில் அம்மா உணவகங்களில் உணவுகளை வாங்கி பசியாறினர். ‘கொரானா’ காலத்தில் அம்மா உணவகங்களில் இலவசமாக உணவுகள் வழங்கப்பட்டன.
திமுக ஆட்சி தொடங்கிய பிறகும் முதலமைச்சர் ஸ்டாலின், அம்மா உணவகங்களை எந்த தொய்வும் இல்லாமல் வழக்கம்போல் நடத்த வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார். ஆனால், மதுரை மாநகராட்சியில் மண்டல உதவி ஆணையாளர்கள், உதவி வருவாய் அலுவலர்கள், அம்மா உணவகங்களுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்வதில்லை. அம்மா உணவங்களுக்கு தேவையான நிதியை பெற்றுக் கொடுப்பதில்லை. இதனால், நிதி நெருக்கடியால் அடிக்கடி அம்மா உணவகங்களில் உணவு தயாரிக்கப்படாமல் மூடப்படுகின்றன. மளிகைப்பொருட்கள், அரிசி, காய்கறிகள், கியாஸ் சிலிண்டர்கள் கொள்முதல் செய்த இடங்களில் முறையாக பணம் கொடுக்கப்படாததால் அவர்கள் மறு முறை பொருட்கள் வழங்க தயங்குகின்றனர். இதனால், மதுரை மாநகராட்சியில் அம்மா உணவங்களை தினமும் அடுப்பை பற்ற வைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘உதவி ஆணையாளர்கள் வருவாய் வரக்கூடிய பணிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அவர்களாகவே தமிழக அரசு அம்மா உணவகத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என நினைத்துக் கொள்கின்றனர். மேயர், ஆணையாளர் போன்றோர் அடிக்கடி அதிமுக அரசு தொடங்கிய திட்டம் என்று பாராமல் அடிக்கடி ஆய்வு செய்து ஏழை மக்கள் பசியாற உதவி செய்ய வேண்டும் ’’ என்றனர்.
இது குறித்து மேயர் இந்திராணியிடம் கேட்ட போது, ‘‘அம்மா உணவங்களுக்கு தேவையான மளிகைப் பொருட்கள், அரிசி உள்ளிட்டப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்படுவது எங்கள் கவனத்திற்கு வந்ததும் உடனடியாக அவை சரி செய்யப்படுகிறது. இனி அது போன்ற பற்றாக்குறை எதுவும் ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ளப்படும்’’ என்றார்.