கழிவுநீர் தொட்டிக்கு குழி தோண்டியபோது விஷ வாயு தாக்கியதில் 2 பேர் உயிரிழப்பு


பிரதிநிதித்துவப் படம்

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் கழிவுநீர் தொட்டிக்காக குழி தோண்டியபோது விஷவாயு தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். அவர்களைக் காப்பாற்றமுயன்ற தீயணைப்பு வீரர் மயக்கமடைந்தார்.

இளையான்குடி பிஸ்மில்லா நகரைச் சேர்ந்தவர் சிக்கந்தர், அப்பகுதியில் வீடு கட்டி வருகிறார். கடந்த 3 நாட்களாக செப்டிக் டேங்க் குழி தோண்டப்பட்டு வருகிறது. சீத்தூரணியைச் சேர்ந்த ராமையா (50), திருவுடையார்புரம் பாஸ்கரன்(50) ஆகியோர் நேற்று இப்பணியில் ஈடுபட்டனர். சுமார் 25 அடிக்கு மேல் குழி தோண்டிய நிலையில், திடீரென இருவரையும் விஷவாயு தாக்கியதில் மயக்கமடைந்துள்ளனர்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்களில் ஒருவர் குழிக்குள் இறங்கியபோது, அவருக்கும் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவரை உடனடியாக மேலே தூக்கி,முதலுதவி அளித்தனர். பின்னர் ஆக்சிஜன் சிலிண்டருடன் குழிக்குள் இறங்கி, மயங்கிக் கிடந்த இருவரையும் மீட்டு, இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், வழியிலேயே இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து இளையான்குடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, "பிஸ்மில்லா நகர் அருகே சீத்தூரணி கண்மாய் பாசனக் கால்வாய் உள்ளது. இதில் இளையான்குடி நகர் பகுதியில் இருந்து கழிவுநீர் விடப்படுகிறது. கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி, நிலத்தடியில் இறங்கி வருகிறது. அதனால்தான் குழி தோண்டியபோது, கழிவுநீரால் உருவான விஷவாயு தாக்கி இருக்கலாம்’ என்றனர்.

x