கோவையில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டுப்பிடித்த போலீஸார்


கோவை: தலைமைக் காவலரை கத்தியால் வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீஸார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.

கோவையில் கடந்த ஆண்டு சத்தியபாண்டி (31) என்பவர் ஒருகும்பலால் துப்பாக்கியால் சுட்டும்,அரிவாளால் வெட்டியும் கொல்லப்பட்டார். இது தொடர்பாக நாகர்கோவில் அருகேயுள்ள வாத்தியார்விளை பகுதியைச் சேர்ந்த பிரபலரவுடி ஆல்வின் (40) உள்ளிட்ட 8-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சில மாதங்களுக்குப் பிறகு ஆல்வின் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார். எனினும், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானதால் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், கோவை கொடிசியா மைதானத்தின் ஒரு பகுதியில் ஆல்வின் பதுங்கியிருப்பதாக ரேஸ்கோர்ஸ் போலீஸாருக்கு நேற்று அதிகாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, காட்டூர் உதவி ஆய்வாளர் கார்த்திகேயன், தலைமைக் காவலர்கள் ராஜ்குமார், சந்திரசேகர் உள்ளிட்டோர் அங்கு சென்று ஆல்வினை கைது செய்ய முயன்றனர்.

அப்போது, ஆல்வின் திடீரென தன்னிடமிருந்த கத்தியால் தலைமைக் காவலர் ராஜ்குமாரின் கையில் வெட்டிவிட்டு, அங்கிருந்து தப்ப முயன்றார். இதையடுத்து, உதவி ஆய்வாளர் கார்த்திகேயன் தனது துப்பாக்கியால் ஆல்வினை நோக்கிச் சுட்டார். இதில் ஆல்வின் கால் முட்டியில் குண்டுகள் பாய்ந்து, மயங்கி விழுந்தார்.

தொடர்ந்து, கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஆல்வினுக்கு, அங்கு பலத்த பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாநகர காவல் துணைஆணையர் ஸ்டாலின், உதவி ஆணையர் பார்த்திபன் உள்ளிட்டோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், இதுகுறித்து பீளமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து துணை ஆணையர் ஸ்டாலின் கூறும்போது, ‘‘ஆல்வின் மீது 3 கொலை மற்றும் கொலை முயற்சி, வழிப்பறி, கூட்டுக் கொள்ளை என மொத்தம் 12 வழக்குகள் உள்ளன. போலீஸார் அவரைப் பிடிக்க முயன்றபோது, தலைமைக் காவலரை தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது’’ என்றார்.

x