தனியாருடன் இணைந்து அரசு பேருந்துகளில் சரக்கு போக்குவரத்து சேவை: போக்குவரத்து துறை தகவல்


கோப்புப்படம்

சென்னை: தனியார் நிறுவனத்துடன் இணைந்து அரசு பேருந்துகளில் சரக்கு போக்குவரத்து சேவை தொடங்கப்பட இருப்பதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துஉள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: அரசு போக்குவரத்துக் கழகபேருந்துகளில் கட்டண வருவாயை தவிர்த்து நிதி நிலையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, பேருந்துகளில் பொருட்கள் வைக்கும் இடங்களை பயன்படுத்தி சரக்கு போக்குவரத்து சேவை திட்டத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொது-தனியார் கூட்டு திட்டம்: அரசு போக்குவரத்து பணிமனைகளில் அனுப்பப்படும் பொருட்களை சேமித்து வைக்கவும் முடியும். இந்த திட்டமானது, வருவாய் பகிர்வு அல்லது வணிகஒப்பந்த அடிப்படையில் பொது-தனியார் கூட்டு திட்டமாக (PPP) அமல்படுத்தப்படும்.

இதில் முதல்கட்டமாக சாத்தியக்கூறு கண்டறிய ஆலோசகர் நியமிக்கப்பட உள்ளார். பின்னர் ஆர்வமுள்ள நிறுவனங்கள் பங்கேற்பதற்கான கோரிக்கையை (RFP) தயாரித்து, பொருத்தமான நிறுவனத்தை தேர்வு செய்வதற்கான செயல்முறைகள் மேற்கொள்ளப்படும்.

தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனமே சரக்கு மற்றும் பார்சல் போக்குவரத்து பணியை மேற்கொள்ளும். இந்த திட்டத்துக்கான ஒருங்கிணைப்பு பணிகளை செயல்படுத்த அரசு பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இத்தகைய ஏற்பாடுகள் மூலம் தமிழ்நாடு அரசுபோக்குவரத்து கழகங்கள் புதியவருவாய் வாய்ப்புகளை பயன்படுத்தி, நீண்டகால பொதுப்போக்குவரத்து சேவைகளை நிலையாக வழங்க முடியும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை நடப்பாண்டு சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது, போக்குவரத்துத் துறை அமைச்சர்சா.சி.சிவசங்கர் வெளியிட்டிருந்த நிலையில் திட்டத்தைசெயல்படுத்துவதற்கான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன.

x