பழனி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை: அறநிலையத்துறை அமைச்சர் எச்சரிக்கை


சென்னை: பழனி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு எச்சரித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு ஆன்மிக பயணங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் புரட்டாசி மாத வைணவ கோயில்களுக்கான ஆன்மிக பயணத்தில் பங்கேற்க 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் விண்ணப்பிக்கலாம் என இந்து சமய அறநிலையத்துறை ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இதையடுத்து பலரும் விண்ணப்பித்து வந்தனர்.

அதன்படி சென்னை மண்டலத்தில் உள்ள வைணவக் கோயில்களுக்கான ஆன்மிக பயணத்தை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

அப்போது ஆன்மிக பயணம் மேற்கொள்ளும் 40 பேருக்கு பயண வழிப்பைகளையும், கோயில் பிரசாதங்களையும் வழங்கினார். இதையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

புரட்டாசி மாதத்தில் வைணவ கோயில்களுக்கு 1,000 மூத்த குடிமக்களை அழைத்துச் செல்லும்ஆன்மிகப் பயணம் 7 மண்டலங்களில் 4 கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் முதற்கட்ட பயணம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு முழுவதும் 270 மூத்த குடிமக்கள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். சென்னை மண்டலத்தில் 40 மூத்த குடிமக்கள் 5 வைணவ கோயில்களுக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர்.

அரசு மானியம்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மானசரோவர், முக்திநாத் ஆன்மிகப் பயணங்களுக்கான அரசு மானியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளதோடு, மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ராமேசுவரம் – காசி ஆன்மிகப் பயணத்தில் இதுவரை 500 பக்தர்கள் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இந்தாண்டு 420 பக்தர்கள் அழைத்து செல்லப்படவுள்ளனர்.

அதேபோல அறுபடை வீடுகளுக்கான ஆன்மிகப் பயணத்தில் 4 கட்டங்களாக 813 பக்தர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். 5-ம் கட்ட பயணம் அக்.6-ம் தேதி திருத்தணியில் தொடங்கவுள்ளது.

கோயில்களுக்கு ஆவின் நெய்: ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களுக்கு 1,003 மூத்த குடிமக்கள் கட்டணமில்லாமல் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். கோயில்களுக்கு தேவையான நெய், ஆவின்நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்யப்பட வேண்டுமென அனைத்து கோயில்களுக்கும் ஆணையர் கடந்த 2021-ம் ஆண்டே சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

பழனி கோயில் பஞ்சாமிர்தம் தொடர்பாக பாஜகவை சேர்ந்த வினோஜ் செல்வம், செல்வக்குமார் ஆகியோர் சமூக வலைதளங்களில் விஷம பிரச்சாரம் செய்துள்ளது குறித்து கோயில் பஞ்சாமிர்தம் தயாரிப்பு பிரிவு கண்காணிப்பாளரால் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இப்படி தவறான செய்திகளை பரப்புபவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பழனியில் முழுமையாக ஆவின் நெய்தான் பயன்படுத்தப்படுகிறது.

இதேபோல், கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம், பிரசாதம் ஆகியவற்றை கண்காணிக்கதனிப்பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்வில் துறையின் செயலாளர் டாக்டர் பி.சந்திரமோகன், ஆணையர் பி.என்.தர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

x