உதயநிதியை துணை முதல்வராக்க முகூர்த்தத் தேதி பார்க்கப்படுவதாக ஆர்.பி.உதயகுமார் குற்றச்சாட்டு


மதுரை: ‘‘திமுக ஆட்சியாளர்கள் உதயநிதியை துணை முதலமைச்சராக்க முகூர்த்த தேதியை பார்த்து வருகிறார்கள். ஆனால், மக்களோ விலைவாசி உயர்வினால் கவலைப்பட்டு வருகிறார்கள்’’ என்று சட்டபேரவை எதிர்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் குற்றம்சாட்டினார்.

திருமங்கலம் தொகுதி பேரையூரில் ரூ.13 கோடியில் மதிப்பில் கட்டப்பட்டு வரும் சார்பு நீதிமன்றத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் நேரில் ஆய்வு செய்தார்.அப்போது அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அதிமுக ஆட்சியில் கே.பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது பேரையூரில் சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். அப்போது அதற்குரிய இடங்கள் சரியாக அமையவில்லை. தொடர்ந்து பல்வேறு முயற்சி எடுத்து தற்போது இந்த இடத்தை நாங்கள் தேர்ந்தெடுத்தோம். இதற்கான நிதியை கே.பழனிசாமி ஒதுக்கி கொடுத்தார். பணிகள் நடக்கிறது. தற்போது நீதிமன்றம் அருகே எனது சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் நிழற்குடை அமைக்கப்பட்டுள்ளது.

அதிமுக மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளார்கள். அதிமுகவின் கடந்த 5 ஆண்டுகளில் தன்னிறைவு பெற்ற தொகுதியாக திருமங்கலம் தொகுதி இருந்தது. ஆனால், தற்போது மூன்று ஆண்டுகளில் ஒப்பிட்டு பார்த்தால் குடிநீர் பிரச்சினை, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. மேலும் குறைவான நிதியையே ஒதுக்குகிறார்கள். இந்தியாவில் எந்த முதலமைச்சரும் செய்யாத வகையில் கிராம ஊராட்சி தோறும் ஆய்வுக் கூட்டத்தை நடத்தி அதில் சாலை,சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ஆய்வு செய்த முதலமைச்சர் கே.பழனிசாமி.

இன்றைக்கு உதயநிதியை துணை முதலமைச்சராக்க முகூர்த்த தேதியை பார்த்து வருகிறார்கள். ஆனால், மக்களோ விலைவாசி உயர்வினால் கவலைப்பட்டு வருகிறார்கள். இன்றைக்கு திமுக அரசு மக்களுக்கு தீர்வு காணாத அரசாக உள்ளது. இந்த பிரச்சினை தீர கே.பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும்’’ என்றார்.

x