மதுரையை இரண்டாம் தலைநகரமாக்கக் கோரி ஆர்ப்பாட்டம்!


மதுரை பழங்காநத்தத்தில் இன்று காமராஜர் மக்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர். படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி.

மதுரை: மதுரையை இரண்டாம் தலைநகரமாக்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை பழங்காநத்தத்தில் இன்று தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி ஏற்படும் வகையில் தமிழக அரசு மதுரையில் தென்மண்டல வளர்ச்சி வாரியத்தை ஏற்படுத்த வேண்டும், மதுரையை இரண்டாம் தலைநகரமாக்க வேண்டும் என வலியுறுத்தி காமராஜர் மக்கள் கட்சி சார்பில் மதுரை பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு அக்கட்சியின் மாவட்டத் தலைவர் அய்யல்ராஜ் தலைமை வகித்தார். மாநில முதன்மைச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். இதில் மாநில பொதுச்செயலாளர் பா.குமரய்யா ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசுகையில், ''தமிழகத்தில் 234 சட்டப்பேரவை தொகுதிகளில் தென்மாவட்டங்களான மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் 58 தொகுதிகள் உள்ளன.

தமிழகத்தின் மக்கள் தொகையான ஏழேகால் கோடி பேரில் (2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி) தென் மாவட்டங்களில் 2 கோடி பேர் உள்ளனர். இருந்தும் மக்கள் தொகைக்கேற்ற போதுமான தொழில் வளர்ச்சி இல்லாததால் வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்று கொண்டிருக்கின்றனர். எனவே தென்மாவட்டங்களின் தொழில் வளர்ச்சி ஏற்படும் வகையில் மதுரை தென்மண்டல வளர்ச்சி வாரியத்தை ஏற்படுத்த வேண்டும். மதுரையை இரண்டாம் தலைநகரகமாக்க வேண்டும்'' என்றார்.

இதில் மாநிலச்செலாளர் ரெங்கராஜ், அரசு ஓய்வுபெற்ற கல்லூரி ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் மனோகரன், மதச்சார்பற்ற ஜனதா தள மாவட்ட துணைத்தலைவர் சேகர், ஐக்கிய ஜனதா தள மாநில கொள்கை பரப்புச் செயலாளர் முருகப்பன் ஆகியோர் பேசினர். இதில் கொள்கைபரப்பு அணி மாநில துணைச் செயலாளர் ஈஸ்வரன், மாவட்டப் பொருளாளர் உதயகுமார், மாநில மகளிரணி செயலாளர் ஐஸ்வர்யா சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இளைஞரணி தலைவர் அரவிந்தன் நன்றி கூறினார்.

x