குற்றாலம் அருவிகளில் குறைவான நீர் வரத்து: அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம்!


தென்காசி: குற்றாலம் அருவிகளில் குறைவான நீர் வரத்து உள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தென்மேற்கு பருவமழை நன்றாக பெய்தது. இதனால் அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது. குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.

இந்நிலையில், ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் பருவமழை ஏமாற்றம் அளித்து வருகிறது. பெரும்பாலான நாட்களில் வறண்ட வானிலை நிலவுகிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதனால் சாரல் சீசன் களையிழந்து, சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கடந்த 2 வாரங்களாக மழை இல்லாததால் குற்றாலம் அருவிகளில் நீர் வரத்து வெகுவாக குறைந்துள்ளது. இன்று குற்றாலம் அருவிகளில் குறைவான அளவிலேயே தண்ணீர் கொட்டியது. என்ற போதும் விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. வெயிலின் தாக்கத்தில் அவதிப்பட்ட மக்கள் குற்றாலம் அருவிகளில் மகிழ்ச்சியுடன் குளித்துச் சென்றனர்.

x