நாகர்கோவில்: கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பக்தர்கள் நீராட இடையூறாக இருந்த ஆபத்தான படிக்கற்கள் அகற்றி சீரமைக்கப்பட்டது.
கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் பக்தர்கள், மற்றும் சுற்றுலா பயணிகள் புனித நீராடுவது வழக்கம். ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை நாட்களில் இங்கு முன்னோர்களுக்கு தர்பணம் செய்வதற்காக கூட்டம் அலைமோதும். 16 கால் கல்மண்டபம் முன்புள்ள இந்தப் பகுதியில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் கூடுவது வழக்கம்.
இந்நிலையில் சமீபத்தில் முக்கடல் சங்கம பகுதியில் குமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா ஆய்வு செய்தபோது, அங்கு பக்தர்கள் குளிக்கும் பகுதியில் உள்ள படிகள் முறையாக இல்லாததால் அதில் பக்தர்கள் தடுக்கி விழுந்து காயம் அடைவதும், அருகே உள்ள பாறாங்கற்களாலும் ஆபத்து நிகழ்ந்து வருவதையும் சுட்டிக்காட்டி அதை சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என கன்னியாகுமரி பேரூராட்சி கவுன்சிலர் சுபாஷ் ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தார்.
இதைத்தொடர்ந்து முக்கடல் சங்கம படித்துறையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார். அத்துடன் தனியார் அமைப்புகள் பங்களிப்புடன் உடனடியாக சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் சர்வதேச கடலோர தூய்மை தினமான இன்று முக்கிய மையமான குமரி முக்கடல் சங்கம படித்துறை பகுதியை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
குகநதீஸ்வரர் பக்தர் சார்பில் நடந்த இந்த சீரமைப்பு பணியில், பக்தர்கள் குளிக்கின்ற இடத்தில் சேதமடைந்து, பக்தர்கள் காயமடையும் வகையில் காணப்பட்ட படிக்கட்டுகளையும், குளிப்பதற்கு இடையூறாக இருந்த பாறாங்கற்களையும் அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது. சீரின்றி காணப்பட்ட படிகட்டுகளை அகற்றி அந்த இடத்தில் புதிய கற்கள் பதியப்பட்டன. நெடுநாள் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.