தமிழகத்தில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான மற்றும் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த வாரம் சனிக்கிழமை முதல் நேற்று அதிகாலை வரை பெய்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. சென்னை மாநகரில் இன்னும் மழை வெள்ளம் முழுமையாக வடியாத நிலை உள்ளது.
இந்நிலையில் மிக்ஜாம் புயல் ஆந்திர மாநிலம் பாபட்லா - ஓங்கோல் இடையே நேற்று மாலை கரையை கடந்தது. புயல் கரையை கடந்தாலும் தமிழகத்தில் அடுத்து வரும் சில நாள்களுக்கு தொடர்ந்து மழைப் பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவலில், 'தமிழகத்தில் காலை 10 மணி வரை நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் லேசான மற்றும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.