மக்கள் புரட்சியை உருவாக்கும்... அரவிந்த் கேஜ்ரிவால் கைது குறித்து அகிலேஷ் யாதவ் கண்டனம்!


ராகுலுடன் அகிலேஷ் யாதவ்

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது ஒரு மக்கள் புரட்சியை உருவாக்கும் என சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.

அரவிந்த் கேஜ்ரிவால்

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மத்திய பாஜக அரசு இறங்கியிருப்பதாக எதிர்க்கட்சிகள் சார்பில் குற்றம் சாட்டப்படுகிறது. அதற்கு உதாரணமாக தமிழகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டவர்களின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி இருப்பதையும், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை நேற்று இரவு அமலாக்கத்துறை கைது செய்து இருப்பதையும் கூறுகிறார்கள்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கு பலமுறை சம்மன் அனுப்பப்பட்டும் ஆஜராகாத அரவிந்த் கேஜ்ரிவால் நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டு இருப்பதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும், அரவிந்த் கேஜ்ரிவால் கைதுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அகிலேஷ் யாதவ்

எதிர்க்கட்சித் தலைவர்களை மக்களிடமிருந்து அகற்ற பாஜக நினைக்கிறது என விமர்சித்துள்ள அகிலேஷ் யாதவ், "தோல்வி பயத்தில் தானே சிறைப்பட்டவர்கள், வேறொருவரை சிறையில் அடைத்து என்ன செய்யப் போகிறார்கள்? மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்று தெரிந்த பிறகு, பயத்தின் காரணமாக பா.ஜ.க. தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்களை எப்படியாவது மக்களிடமிருந்து அகற்ற நினைக்கிறது. அரவிந்த் கேஜ்ரிவாலின் கைது ஒரு புதிய மக்கள் புரட்சியை உருவாக்கும்" என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவரை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை செய்ய அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறையினர் கோர உள்ளனர்.

x